இரவு நேரத்தில் ரயிலில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை 'சார்ஜ்' செய்ய தடை!: மின்கசிவு, தீ விபத்தை தவிர்க்க அதிரடி நடவடிக்கை..!!

     -MMH

     ரயில் பயணத்தின் போது இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ரயிலில் சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணங்களின் போது ஏற்படும் மின்கசிவு, தீ விபத்து ஆகியவைகளை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு, ஏ.சி., முன்பதிவு மற்றும் பொது பெட்டிகளில் மொபைல்போனுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது. பயணிகள் சிலர் இரவில் சார்ஜ் ஆன் செய்து விட்டு, மறுநாள் காலை வரை அணைக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.

இதனால், மின் சப்ளை மாறுவதுடன், அடிக்கடி சிறுசிறு மின் விபத்தும் ஏற்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டு பெங்களூரு ஆசூர் சாகிப் நாந்தார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாய்ண்டுகள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என ரயில் பாதுகாப்பு ஆணையர் பரிந்துரைத்தார். இந்த நிலையில் பாதுகாப்பு கமிஷனரின் பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்தக்கூடிய வகையில் கடந்த 16ம் தேதி முதல் மேற்கு ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாய்ண்டுகளுக்கான மின் இணைப்பை துண்டித்தது.

இதனால் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயில்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது. மற்ற நேரங்களில் பயன்படுத்தி கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் தீ விபத்துகளை தவிர்க்க வேறு பல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ரயில்வேத்துறை அதுகுறித்த பயணிகளுக்கு தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டல ரயில்வே நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

-Ln.இந்திராதேவி முருகேசன்,  சோலை. ஜெய்க்குமார்.

Comments