சிங்கம்புணரி வட்டாரத்தில் கொரானா பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை அக்கறையுடன் வேண்டுகோள்!
கொரோனா தொற்று கடந்த ஓராண்டுக்கு முன்பு வேகமாக பரவி பல ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இதை தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அரசு சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
தற்போது இரண்டாம் கட்டமாக கொரானா வைரஸ் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பிரான்மலை அரசு வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு கூறியதாவது,"தற்போது கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை அவசியம் போட்டு கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முதற்கட்டமாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. முதல் தடுப்பூசி போட்ட பிறகு 28 நாட்கள் கழித்து 2வது தடுப்பூசி போடப்பட்டது. தற்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 309 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
மேலும் உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் தற்போது கொரோனா தொற்று பரவுவதால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். எச்சரிக்கையுடன் இருந்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்" என பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு கூறினார்.
- அப்துல்சலாம்.
Comments