கடன் தொல்லையால் ஏற்படும் விபரீதம்..!!

 

-MMH 

                   கோவை கிணத்துக்கடவு பகுதியை அடுத்த செட்டிக்காபளையம் பகுதியைச் சேர்ந்த சேதுராமன் என்பவரது மகன் விஜயகுமார்(38). தாமரைக் குளம் பகுதியில் கறிக்கடை நடத்தி வரும் விஜயகுமார், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரிடம் கடனாக 20 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.

பெறப்பட்ட கடனில் ரூ. 11 ஆயிரத்தில் விஜயகுமார் செலுத்திய நிலையில் மீதம் உள்ள ரூ. 9 ஆயிரத்தை உடனடியாக செலுத்துமாறு ஜெயப்பிரகாஷ் நிர்ப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கடனை திருப்பி செலுத்துமாறு தொந்தரவு செய்து வந்த ஜெயப்பிரகாஷ் நேற்று தாமரைக் குளம் பகுதியில் பொள்ளாச்சி சாலையில் நின்று கொண்டிருந்த விஜயகுமாரின் வாகனத்தைப் பறிமுதல் செய்ய முற்பட்டுள்ளார்.

அப்போது விஜயகுமார் தான் விரைவில் கடனை திருப்பி செலுத்தி விடுவதாகவும், வாகனத்தைப் பறிமுதல் செய்ய வேண்டாம் எனவும் மன்றாடி உள்ளார். ஆனால் வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயன்ற ஜெயப்பிரகாஷ் விஜயகுமாரைத் தாக்கி வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்ட விஜயகுமார் உள்ளே இருந்த தீப்பெட்டியை எடுத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் தனது உடலில் தீயைப் பற்ற வைத்தார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஜெயப்பிரகாஷ்-விஜயகுமாரின் வாகனத்தை எடுத்துச்செல்ல முயல்வதுடன் விஜயகுமாரைத் தாக்குவதும் அதனைத் தொடர்ந்து விஜயகுமார் வாகனத்திலிருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றித் தீக்குளிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜெயப்பிரகாஷை இதுவரை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ள விஜயகுமாரின் உறவினர்கள் உடனடியாக குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈஷா.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments