திருப்பத்தூரில் மக்கள் வெள்ளத்தில் மு.க.ஸ்டாலின் எழுச்சி பிரச்சாரம்!
எதிர்வரும் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்ய, திமுக தலைவர் ஸ்டாலின் கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் பெரும் திரளான மக்கள் கூடுகின்றனர்.
நேற்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை தொகுதி வேட்பாளர்களான கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி மற்றும் காங்கிரஸ் வேட்பாளரான மாங்குடி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான குணசேகரன் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய மு.க.ஸ்டாலின், 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைப்பதே எனது முதல் கடமை. அரசியல் விபத்தால் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கடின உழைப்பால் முதல்வர் ஆனேன் என்று பொய் சொல்லுகிறார்.
அதிமுகவின் கடந்த தேர்தல் வாக்குறுதிகளான இலவச செல்போன், கேபிள் டிவி கட்டணம் குறைப்பு, திருச்சி மதுரை கோவை போன்ற ஊர்களில் மோனோ ரயில் திட்டம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 25 ரூபாய் என நிர்ணயம் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி அமைத்தவுடன் சிவகங்கை மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி தொடங்கப்படும்.
கணியன் பூங்குன்றனார் நினைவிடம் அமைக்கப்படும். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் காரைக்குடி, சிவகங்கை, இளையாங்குடி, சிங்கம்புணரி வரை நீடிக்கப்படும். காரைக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். சிவகங்கை மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும். எனவே, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்க தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பி வையுங்கள்' என்றார்.
- அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments