சந்திரலேகா ஐஏஎஸ் நியாபகம் இருக்கா!! - லிஸ்டை அடுக்கி ஸ்டாலின் விளாசல்!

     -MMH

பெண்களை திமுக இழிவுபடுத்துவதாகக் கூறிய பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக சார்பாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று பிரதமர் மோடி தாராபுரம் வந்திருந்தார்.  பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாகத் தாக்கினார், பிரதமர் மோடி. முக்கியமாக, திமுக பெண்களுக்கு எதிரான கட்சி என்று மோடி குறிப்பிட்டார்.

நேற்று பிரச்சாரத்தில் பேசிய மோடி மேலும், “திமுக பெண்களை இழிவுபடுத்துகிறது. 2ஜி ஏவுகணை பெண்களுக்கு எதிராக ஏவப்படுகிறது. பெண்களை இழிவுபடுத்தி பேசும் நிர்வாகிகளை திமுக தலைமை கண்டிக்கவில்லை. 1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதியை மறந்துவிடமுடியாது. சட்டமன்றத்தில் ஜெயலலிதா திமுகவினரால் அவமானப்படுத்தப்பட்டார். திமுக, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்துகிறது.

கடவுளே! திமுக- காங். ஆட்சிக்கு வந்துவிட்டால் இன்னமும் பெண்களை இழிவுபடுத்துவார்கள். பெண்களை இழிவுபடுத்துவதுதான் திமுக- காங்கிரஸ் கலாசாரம்.

பெண்களை மிக கேவலமாக பேசியிருக்கிறார் திண்டுக்கல் லியோனி. உதயநிதி, திண்டுக்கல் லியோனி ஆகியோர் பெண்களை இழிவாக பேசுகின்றனர். திமுக, காங், திரிணாமுல் காங். கட்சிகள் பெண்களுக்கு எதிரானவை" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலங்குளத்தில் பிரச்சாரம் செய்தார். இதில், "அதிமுக பெண்களை எப்படி நடத்துகிறது என்று பொது மக்களுக்கு தெரியும். தமிழ்நாட்டுக்கு தமது அரசு செய்த நன்மைகளைக் கூறி வாக்குக் கேட்க பிரதமருக்கு வகையில்லை. அரசின் திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்க பிரதமர் மோடியால் முடியவில்லை. தனது கூட்டணிக் கட்சி செய்த தீமைகளை மறைக்கவும் வழியில்லை. அதைவிட்டுவிட்டு திமுக மீது மோடி குற்றஞ்சாட்டுகிறார். பக்கத்தில்தான் பொள்ளாச்சி இருக்கிறது. பெண்கள் பற்றி பேசும் மோடி பொள்ளாச்சி பற்றி பேசினாரா?

பொள்ளாச்சி சம்பவம் கூட தெரியாமல்தான் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறாரா? பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது. அது நினைவு இருக்கிறதா? அதிமுகவில் இப்படித்தான் பெண் அதிகாரிகள் நடத்தப்பட்டார்கள். அதிமுகவின் பெண்கள் பாதுகாப்பு பற்றி அவர்களிடம் போய் கேளுங்கள்.

ஜெயலலிதாவிற்கு எதிராக பேசியதாகக் கூறி நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமிக்கு எதிராக வரவேற்பு கொடுத்தனர். சாமிக்கு அதிமுக மகளிரணி கொடுத்த வரவேற்பு பற்றித் தெரியுமா? அதைப்பற்றியெல்லாம் சொல்வதற்கே நா கூசுகிறது; பெண்கள் பாதுகாப்பு பற்றி நீங்கள் பேசலாமா?" என்று பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

-பாரூக்.

Comments