பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி விரைவில் கைது..?

  -MMH
      பெண் எஸ்பி ஒருவரிடம் சிறப்பு டிஜிபி பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து சென்னை டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிக்க சென்னை வந்த போது ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின்பேரில், அவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் தடுத்து நிறுத்திய அம்மாவட்ட எஸ்பி டி கண்ணன் என்பவர், பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளிப்பதை தடுக்கும் நோக்கில், டிஜிபியிடம் புகாரளிக்க வேண்டாம் என்றும், அதனால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த இரு சர்ச்சைகளும் பூதாகரமான நிலையில், வழக்குப்பதிவு, சிபிசிஐடி விசாரணை, நீதிமன்ற விசாரணை என அடுத்தடுத்த அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில் செங்கல்பட்டு எஸ்.பி. டி. கண்ணனை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டது.

இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது, பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்ததற்காக, செங்கல்பட்டு எஸ்.பி கண்ணனை மட்டும் சஸ்பெண்ட் செய்த தமிழக அரசு, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான டிஜிபியை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கும் அறிக்கை அளிக்கப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

-சோலை ஜெய்க்குமார், Ln.இந்திராதேவி முருகேசன்.

Comments