திருப்பத்தூர் புதூரில் மஞ்சுவிரட்டிற்கு அனுமதி மறுப்பு! காளைகள் வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன!
திருப்பத்தூர் அருகே என்.புதூரில் அமைந்துள்ள வெள்ளாளங்கருப்பா் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி வெள்ளியன்று புகழ் பெற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டும் மஞ்சுவிரட்டு நடத்த முடிவு செய்து, அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி இக்கிராமத்தினர் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வந்த நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தேர்தல் பாதுகாப்பு நலன் கருதி என்.புதூர், நெடுமரம் உள்ளிட்ட கிராமங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் முகநூல், சமூக ஊடகங்களில் மஞ்சுவிரட்டு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததை அடுத்து ஏராளமான காளைகளைக் கொண்டு வந்து காளை உரிமையாளர்கள் மஞ்சுவிரட்டு திடலில் காத்திருந்தனர்.
பின்பு மஞ்சுவிரட்டு நிறுத்தப்பட்டதை அறிந்தவர்கள் கட்டுமாடுகளாக வயல்களில் அவிழ்த்து விட்டு சென்றனர். பொதுவாக லட்சக்கணக்கில் திரளும் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர் உத்தரவையடுத்து மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறாது என கிராமத்தார்கள் அறிவிப்பினைத் தொடர்ந்து பார்வையாளர்கள் இந்த ஆண்டு அதிகமாக வரவில்லை. ஆனால் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இதனையடுத்து கிராம பொதுமக்கள் வெள்ளாளங் கருப்பர் கோவிலில் சுவாமி ஆட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்பு நேற்று மாலை 5.30 மணிக்கு மேல் மஞ்சுவிரட்டு தொழுவிலிருந்து மரபிற்காக கோவில் காளையை மட்டும் அவிழ்த்து விட்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments