தினமும் தூக்க மாத்திரை! தூக்கம் தவிர மற்ற எல்லா பிரச்னைகளும் வரும்!

 

-MMH

          ந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தூக்கம் தொடர்பான பிரச்னை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய மக்கள் தொகையில் 9 சதவிகிதம் பேருக்கு தீவிர தூக்கமின்மை பிரச்னை உள்ளது. 30 சதவிகிதம் பேருக்கு தூக்கமின்மை காரணமாக அவதியுறுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூக்கம் வரவில்லை என்று மாத்திரை எடுப்பவர் என்றால் நீங்களும் அதில் ஒருவர் என்பதை புரிந்துகொள்ளலாம்.

தூக்கமின்மை காரணமாக அவதியுறுபவர்களின் கடைசி தீர்வு தூக்க மாத்திரை. எப்போதாவது ஒரு முறை எடுப்பது பிரச்னை இல்லை. அதுவே வழக்கமாக மாறும்போது அதன் பக்க விளைவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தூக்க மாத்திரை என்பது நமக்கு மயக்கத்தைக் கொடுக்கக் கூடியது. இந்த மாத்திரைகள் சோர்வு, மயக்கத்தை அதிகரிக்கச் செய்து நல்ல தூக்கம் வரச் செய்கிறன. இந்த மாத்திரைகள் எல்லாம் குறுகிய காலத்துக்கு பயன்படுத்தும் வகையைச் சார்ந்தவை. தொடர்ந்து எடுக்கும்போது அவை நினைவு திறன், கவனிக்கும் திறன் போன்றவற்றை பாதிக்கச் செய்யும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொடக்கத்தில் இரண்டு மில்லி என்ற அளவில் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டிருப்பார்கள். நாளாக நாளாக அது தூக்கத்தைத் தராது. இதனால் இவர்களாகவே இரண்டு மில்லியை நான்கு மில்லியாக மாற்றுவார்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக டோஸ் அளவை அதிகரிப்பார்கள். கடைசியில் 10 மி.கி எடுத்தும் கூட தூக்கம் வராமல் அவதியுறுவார்கள்.

மாத்திரையை முதலில் போடும்போது நம்முடைய உடல் அந்த வீரியத்துக்கு கட்டுப்படும். நாளாக நாளக அந்த வீரியத்துக்கு உடல் பழகிவிடுவதால் தூக்கம் வருவது இல்லை. இதன் காரணமாக 5-6 மாத்திரை சாப்பிடும் அளவுக்கு பலரும் சென்றுவிடுகின்றனர்.

தொடர்ந்து தூக்க மாத்திரை எடுத்து வருபவர்களுக்கு கை, கால், பாதத்தில் எரிவது போன்ற உணர்வு ஏற்படும். பசியின்மை ஏற்படும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு இருக்கும். எப்போதும் மயக்கம் இருக்கும். வாய், தொண்டை உலர்வது, காற்று வெளியேறுவது, தலைவலி, நெஞ்சு எரிச்சல், குமட்டல், மனநிலை தடுமாற்றம், கவனச் சிதறல், நினைவு திறன் இழப்பு, வயிற்று வலி, சரியாக நிற்க கூட முடியாமல் தடுமாற்றம், உடல் சோர்வு போன்ற பிரச்னை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

-ராயல் ஹமீது.

Comments