சிவகங்கை அருகே சப் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் அரசு பேருந்து மோதியதில் பலி!

     -MMH

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு விதிமுறைகளை மீறி பணம் மற்றும் பொருட்களை கொண்டு செல்லுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


அந்தவகையில், சிவகங்கை - இளையான்குடி சாலையில் ஊத்திகுளம் அருகே சிறப்பு வட்டாட்சியர் அசோக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனர். அதில் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் கர்ணன் (51 ), சிவகங்கை ஆயுதப்படை காவலர்கள் பாலசுப்பிரமணியன்( 32), சந்தனக்குமார் (30), காரல் மார்க்ஸ்( 31) ஆகியோரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, சிவகங்கையிலிருந்து தாயமங்கலத்திற்கு சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சோதனை செய்து கொண்டிருந்த காவலர்கள் மீது மோதியது. இதில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கர்ணன் உள்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். மேற்கண்ட 4 பேரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறப்பு சார்பு ஆய்வாளர் கர்ணன் உயிரிழந்தார்.

இதையடுத்து, பாலசுப்பிரமணியன், சந்தனக்குமார் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் ஆயுதப்படை காவலர் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார். அங்கு சந்தனக்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். காவலர் கார்ல் மார்க்ஸ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

- பாரூக், சிவகங்கை.

Comments