ஆடுதான்யா வித்துட்டு வர்றேன்! அணுகுண்டா வித்துட்டு வர்றேன்? பறக்கும் படை பரிதாபங்கள்!
தேர்தல் அறிவிப்பு வெளியானதும் பறக்கும் படைகள் தமிழகமெங்கும் தங்கள் பணியைத் தொடங்கிவிட்டன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்த இந்த பறக்கும் படையினர் பல இடங்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 200 கி.மீ தூரம் செல்வதற்குள் நான்கைந்து முறை வாகனங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இதற்குப் பயந்துகொண்டே பலரும் சொந்த வாகனங்களை விட்டு விட்டுப் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.
இந்நிலையில் பறக்கும் படையில் உள்ள ஒரு அதிகாரியிடம் எதேச்சையாகப் பேசும்போது, அவர் சொன்ன தகவல்கள் பகீர் ரகமாக இருந்தன. "இது தேவையில்லாத வேலைங்க. வாக்காளர்களுக்குக் கொடுக்க பணம், பரிசுப்பொருள்கள் கொண்டு போறதைத் தடுக்கத்தான் பறக்கும் படை. ஆனால், பணம், பரிசுப்பொருள் கொடுக்காமலா இருக்காங்க? அதெல்லாம் நடந்துகிட்டுதான் இருக்குது. ஆனால், நாங்க ரோட்டுல நின்னுகிட்டு போற வர்ற வண்டிகளைச் சோதனை போடுறோம். அதுலயும் அரசியல்வாதிங்க வண்டிகளை, குறிப்பா ஆளுங்கட்சி வண்டிகளை மறிக்கக் கூடாது. அதையும் மீறிச் சோதனை பண்ணி எதையாச்சும் பிடிச்சா, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லணும். அவங்க, அப்புறம் மேலிடத்துல கேட்டுச் சொன்ன பிறகுதான், வழக்குப் போடுறதா, விட்டுடுறதான்னு முடிவு பண்ண முடியும்.
இதனால பெரிய பெரிய முதலைங்களை கண்ணுக்குத் தெரிஞ்சும் விட்டுடுறோம். ஆனா, இத்தனையும் செஞ்சிட்டு எங்களுக்கு டார்க்கெட்டும் கொடுக்குறாங்க. ஏன் ஒரு கேஸ் கூடப் பிடிக்கலை, ஒழுங்கா கேஸ் பிடிச்சுட்டு வாங்கன்னு சொல்றாங்க. இதுக்காகப் பல அதிகாரிகள், அப்பாவிகள் சிக்குனா கேஸ் போட்டுடுறாங்க. வாரச்சந்தையில ஆடு வித்துட்டு வர்றவங்க, மார்க்கெட்டுல காய்கறிகளை வித்துட்டு வர்ற விவசாயிகள், கல்யாணத்துக்கு நகை வாங்கிட்டுப் போறவுங்கனு சிக்குன ஆளுங்களை பிடிச்சு வழக்குப் பதிவு பண்ணிகிட்டு இருக்கோம். மனசாட்சி உறுத்துது'' என்றார் அந்த நேர்மையான அதிகாரி. தமிழகம் முழுவதும் இதுதான் இன்றைய நிலை.
"மழை, வெயில் பார்க்காம ஆட்டுக்குப் பின்னாடியே அலைஞ்சு 10 ஆடுகளை வளர்த்தேன். அவசர செலவு ஒண்ணு வந்திடுச்சு. அதுக்காக ஆடுகளை வண்டியில ஏத்திட்டுப் போய் சந்தையில வித்தேன். 10 ஆடுக வித்ததுல ₹.63,000 கிடைச்சது. ஆடுகளைக் கொண்டுபோன வேன்லயே திரும்பி வரும்போது, போலீஸ் பிடிச்சுட்டாங்க. எங்க வண்டி முழுக்க சோதனை பண்ணி, நாங்க என்னமோ தீவிரவாதிங்க மாதிரி வீடியோ எல்லாம் எடுத்தாங்க. கடைசியில என்கிட்ட இருந்த ஆடு வித்த பணம், என் கையில இருந்த பணம் எல்லாம் சேர்த்து மொத்தம் ₹.65,000த்தையும் பறிச்சுகிட்டாங்க.
கேஸ் போடப்போறேன்னு சொன்னாங்க. ஆடுதானய்யா வித்தேன். அணுகுண்டா வித்துட்டு வர்றேன். என் காசைக் கொடுத்திடுங்க சாமீ'னு கால்ல விழுந்துட்டேன். அப்புறம் அவங்களுக்குள்ள குசுகுசுன்னு பேசுனாங்க. அதுல ஒரு போலீசுக்காரரு கேஸ் போட்டே ஆகணும்னு ஒத்த கால்ல நின்னாரு. ஆனா, அந்த ஆபீசரு நல்ல மனுஷன். சம்சாரி வீட்டுப் பிள்ளைன்னு நினைக்கிறேன். எலெக்ஷன் முடியுற வரைக்கும் 50,000-க்கு மேல கையில காசை வெச்சுக்காதீங்க'னு சொல்லிக் கேஸ் போடாம, காசைக் கொடுத்து அனுப்புனாரு. காசு கைக்கு வந்ததும்தான் போன உசுரு வந்துச்சு. எந்த சாமீ புண்ணியமோ உழைச்ச காசு கிடைச்சிடுச்சுன்னு வீடு வந்து சேர்ந்துட்டேன். அடுத்த சந்தையில போய் ஆடு வாங்கி வளர்க்கலாம்னு நினைச்சேன். இப்ப அந்த எண்ணத்தை மூட்டை கட்டி வெச்சுட்டேன். எலெக்ஷன் முடியுற வரைக்கும் சல்லிக்காசு எடுத்துட்டு வெளியே போகமாட்டேன்'' என வேதனையோடு சொல்கிறார், பறக்கும் படை சோதனையில் சிக்கி, ஆடு விற்ற பணத்தை இழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த தம்மண்ணன்.
இப்படி காய்கறி விற்றுவிட்டு வரும் வழியில், பறக்கும் படை சோதனையில் பணத்தைப் பறிகொடுத்தவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப் போன்ற எளிய மக்களின் கோரிக்கையெல்லாம் இவைதான். "சோதனை செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அதைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால், சாதாரண மனிதர்களைப் பிடிக்கும்போது, அவர்கள் வாக்காளர்களுக்குக் கொடுக்கக் கொண்டு செல்கிறார்களா என்பது பார்வையிலேயே தெரிந்து விடும். எங்கள் உழைப்பினால் கிடைத்த பணத்தைப் பறித்துக்கொள்ளாதீர்கள். எங்களைச் சோதனை செய்யும் நீங்கள், அரசியல்வாதிகளை மட்டும் ஏன் முறையாகச் சோதனை செய்வதில்லை? எனவே அரசியல்வாதிகளைச் சோதனை செய்யுங்கள். எங்களைப் போன்ற அப்பிராணிகளை விட்டு விடுங்கள்'' என்பதுதான்.
-ராயல் ஹமீது.
Comments