மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி..! அநியாயம்..!! கோவையில் பரபரப்பு...
கோவையை அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் கோட்டை ஈஸ்வரி (வயது 27). இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டிற்கு அவர் மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதை பரிசீலித்த மின்வாரிய அதிகாரிகள் ரூ.12 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர்.
அதற்கு கோட்டை ஈஸ்வரி அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறினார். அதற்கு மின்வாரிய அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் மின் இணைப்பு கிடைக்கும்.
அதில் ரூ.5,636 மின் இணைப்புக்கு செலுத்த வேண்டிய கட்டணம் என்றும் மீதி ரூ.4,364 லஞ்சப்பணமாக கொடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோட்டை ஈஸ்வரி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்சம் கேட்ட பாப்பம்பட்டி மின்சார வாரிய உதவி பொறியாளர் எம்.முத்துராஜ் (40), ஆய்வாளர் ஆர்.தங்கராஜ் (48) ஆகியோரை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர். இதற்காக ரசாயனம் தடவிய பணத்தை கோட்டை ஈஸ்வரியிடம் போலீசார் கொடுத்து விட்டு மின்சார வாரிய அலுவலகத்தின் வெளியே காத்திருந்தனர். அதன்படி, கோட்டை ஈஸ்வரி மின்சார வாரிய அதிகாரிகளிடம் லஞ்சப்பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று எம்.முத்துராஜ், ஆர்.தங்கராஜ் ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னூர் அருகே லஞ்சம் வாங்கியதாக மின்சார வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட் டனர் தற்போது லஞ்சம் வாங்கியதாக மின்சார வாரிய அதிகாரிகள் 2 பேர் மீண்டும் கைதாகி இருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கிரி,ஈஷா.
Comments