சரக்குக்கு பதிலாக சானிடைசர்! உயிரைவிடும் மதுப்பிரியர்கள்!

 

-MMH

      விஜயவாடாவில் மதுபானம் விலை ஏற்றத்தால், சானிடைசர் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போதைக்கு அடிமையான மதுப்பிரியர்கள் பொதுமுடக்கம் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்ட சமயத்தில், சானிடைசர் குடிக்கத் தொடங்கினர். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணமே இருந்தது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டாலும், சரக்குகளின் விலை ஏற்றத்தால் மீண்டும் சிலர் சானிடைசர் பக்கமே செல்கின்றனர். குறிப்பாக, ஆந்திராவில் சானிடைசர் குடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.

அந்த வரிசையில், நேற்று முன்தினம் (மார்ச் 24) விஜயவாடாவில் இரண்டு பேர் சானிடைசர் குடித்ததில் உயிரிழந்தனர். கோட்டாபேட்டாவை சேர்ந்த சிராம் நாகேஸ்வர ராவ், சானிடைசர் அதிகளவில் குடித்ததில் உயிரிழந்தார். அதேபோல, வின்சிப்பேட்டாவைச் சேர்ந்த தொட்டகுரா பாக்யராஜுவும் சானிடைசர் குடித்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மேலும், மதுபானம் விலை ஏற்றத்தால், மதுப்பிரியர்கள் தற்போது சானிடைசர் குடித்துவருகின்றனர். அதனை எடுத்துக்கொள்வதால் வாந்தி, வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அதிகளவில் சானிடைசர் எடுத்துக்கொள்வது உடலில் உறுப்புகள் சேதமடைந்து, உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது.

இதனைத் தடுக்கும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதுபோதைக்கு அடிமையானவர்கள் சானிடைசர் வாங்க வந்தால், அதனை விற்பனை செய்யாதீர்கள் என மருந்துக் கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆந்திராவில் பல இடங்களில் சானிடைசர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கைப் பலகைகள் வைத்துள்ளனர்.

-பாரூக்.

Comments