திருப்பத்தூரில் ஓட்டுனரின் போதையில் தள்ளாடிய அரசுப் பேருந்து!
திருப்பத்தூர் அருகே உள்ள வேலங்குடியில் பிரசித்தி பெற்ற சாம்பிராணி வாசகர் கோவிலில் வருடம் தோறும் மாசி மாதம் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் கலந்துகொள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் திருவிழா நேரத்தில் இக்கோவிலுக்கு திருப்பத்தூர், பொன்னமராவதி மற்றும் சிங்கம்புணரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை திருப்பத்தூரிலிருந்து சுமார் 40 பயணிகளுடன் வேலங்குடி நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து தாறுமாறாக ஓட்டப்படுவதைக் கண்ட சிங்கம்புணரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன், பேருந்தை மடக்கி விசாரித்தபோது ஓட்டுனர் முருகேசன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்தபோது அரசு பேருந்தின் ஓட்டுநர் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் பொன்.ரகு உத்தரவின் பேரில் வழக்கு பதியப்பட்டு, தப்பியயோடிய ஓட்டுனர் முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். தப்பி ஓடிய முருகேசனை காலவரையற்ற இடைநீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே உயிர் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments