பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதி ஒரு கண்ணோட்டம்..!!

 

-MMH

                                கோவை மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே உருவாக்கப்பட்டதுதான் பொள்ளாச்சி வருவாய் கோட்டம். இந்த கோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதி. பொள்ளாச்சி என்றாலே பசுமைக்கு பெயர் பெற்ற ஊர். எங்கு திரும்பினாலும் அனைத்து இடங்களிலும் தென்னை தோட்டங்களும், பச்சைபசேல் என புல்வெளிகளும், அதனை சுற்றி ஓடும் சிறு ஆறுகளும்தான் நினைவுக்கு வரும். 

பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் தென்னைநார் தொழிற்சாலைகள் அதிகம். இங்கிருந்துதான் தென்னைநார், நார்கட்டிகள், தென்னைநார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவை பல்வேறு வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருடத்திற்கு ரூ.2000 கோடிக்கும் மேல் தென்னைநார் சார்ந்த ஏற்றுமதி நடைபெறுகிறது.

பொள்ளாச்சி சுப்ரமணியம் சுவாமி கோவில், மாரியம்மன் கோவில் போன்றவை பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களாகும். இங்கு கவுண்டர் சமூகத்தினர் அதிகமாகவும், செட்டியார் சமூகத்தினர் அதற்கு அடுத்தபடியாகவும், நாடார், பட்டியல் இனத்தவர்களும் வசித்து வருகின்றனர். இந்த தொகுதியில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 777 மொத்த வாக்களாளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,08,302 பேரும், பெண் வாக்காளர்கள் 1,17,443 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 32 பேரும் உள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில் நகரங்களை விட கிராமங்கள்தான் அதிகம். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளும், நெகமம் பேரூராட்சியும் உள்ளது. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் அரசம்பாளையம், ஆண்டிபாளையம், செட்டிக்காபாளையம், தேவணாம்பாளையம், தேவராயபுரம், கோவிந்தாபுரம், கக்கடவு, காணியாலம்பாளையம், கப்பளாங்கரை, காட்டம்பட்டி, கொண்டம்பட்டி, கோதவாடி, கோவில்பாளையம், குளத்துப்பாளையம், குருநெல்லிபாளையம், குதிரையாளம்பாளைம், மன்றாம்பாளையம், மெட்டுவாவி, மேட்டுப்பாளையம், முள்ளுப்பாடி, நல்லட்டிபாளையம், பனப்பட்டி, பெரியகளந்தை, சிறுகளந்தை, சோளனூர், சூலக்கல், வடசித்தூர், வரதனூர் போன்ற ஊராட்சிகள் அடங்கும்.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் சந்திராபுரம், சின்னநெகமம், வகுத்தம்பாளையம், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளி செட்டிபாளையம், தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், காபிலிபாளையம், ஒக்கிலிபாளையம், குரும்பபாளையம், குள்ளக்காபாளையம், வெள்ளாளபாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன்முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகள் பொள்ளாச்சி தொகுதிக்குள் வருகிறது.

தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்த பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு கல்லூரி திறக்கப்பட்டது. தற்போது புதிய கட்டிடம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இதுதவிர பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 5 மாடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் சிக்கலான பிரசவத்திற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் வடுகபாளையம் பிரிவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு புறவழிச்சாலை பணிகள் துவங்கியுள்ளது. பொள்ளாச்சி- திண்டுக்கல் நான்குவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய கிராமப்பகுதிகளுக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்றால் அது ஒன்றே ஒன்றுதான் என்று சொல்ல வேண்டும். மயிலாடுதுறை, தென்காசி போன்ற சிறிய பகுதிகள் கூட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் தகுதி இருந்தும் இதுவரை பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கவில்லையே என்பது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை மாவட்டம் ஆக்க வேண்டும் என்பது பொள்ளாச்சி மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனை மலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏவாக உள்ள பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏவாக உள்ளார். ஒருமுறை உடுமலையில் இருந்துள்ளார். தற்போது சட்டசபை துணைத் தலைவராகவும் உள்ளார். ஆகவே இந்த தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக பார்க்கப்படுகிறது. அதிகமான திட்டங்களை பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் பெற்று தந்துள்ளார்.

குறிப்பாக பி.ஏபி திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உதவியுடன் இருமாநில முதல்வர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து, திருவனந்தபுரத்தில் இருமாநில முதல்வர் சந்திப்பு நடைபெற்று இருமாநில சார்பிலும் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.

பொள்ளாச்சியை மாவட்டமாக்க கோரிக்கை வைத்து பலமுறை சட்டசபையில் பேசியது, பொள்ளாச்சி தொகுதியில் கிராமப்பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது புதிய கூட்டுகுடிநீர் திட்டத்திற்கான பணிகளை செயல்படுத்தியது என்று பலவற்றை சொல்லலாம். 

இந்த தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.கவும், தி.மு.க கூட்டணியில் தி.மு.க., கொ.ம.தே.க போன்ற கட்சிகள் போட்டியிடலாம். இருந்தபோதும் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பான பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கப்படாமல் உள்ளதால் அதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. கடந்த 12 சட்டப்பேரவை தேர்தல்களில் 8 முறை அ.தி.மு.கவும், ஒரு முறை சேவல் சின்னமும், 3 முறை தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது.

1967- ஏ.பி.சண்முகசந்தரம் (தி.மு.க)

1971- ஏ.பி.சண்முகசுந்தரம் (தி.மு.க)

1977- ஓ.பி.சோமசுந்தரம்(அ.தி.மு.க)

1980- எம்.வி.ரத்தினம்(அ.தி.மு.க)

1984- எம்.வி.ரத்தினம்(அ.தி.மு.க)

1989- வி.பி.சந்திரசேகர்(சேவல்சின்னம்)

1991- வி.பி.சந்திரசேகர் (அ.தி.மு.க)

1996- ராஜூ (தி.மு.க)

2001- பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க)

2006- பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க)

2011- முத்துகருப்பண்ணசாமி (அ.தி.மு.க)

2016- பொள்ளாச்சி வி.ஜெயராமன்(அ.தி.மு.க).

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.



Comments