பொள்ளாச்சியில் பிடிபட்ட கொலையாளி பரபரப்பு வாக்கு மூலம்..!!

 

-MMH 

       கோவை மாவட்டம் பொள்ளாச்சி காண்டூர் கால்வாயில் வாலிபரை  தள்ளி  கொலை செய்தது எப்படி என்று கைதான நண்பர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரை சேர்ந்தவர் அம்சாவேல். இவரது மகன் பிரசாந்த் என்கிற புருஷோத்தமன் (வயது 19). ஐ.டி.ஐ. படித்து உள்ளார். பொள்ளாச்சியில் உள்ள ஒரு பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி முதல் அவரை திடீரென்று காணவில்லை. 

மேலும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மாயம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாந்த் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் மாயமான பிரசாந்தை தேடி வந்தனர்.

இதற்கிடையில் ஆனைமலையை அடுத்த காளியாபுரத்தில் உள்ள கோழிப்பண்ணை அருகில் பிரசாந்தின் மோட்டார் சைக்கிள் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை மீட்டு, விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது பிரசாந்தின் நண்பர் சேத்துமடை அண்ணா நகரை சேர்ந்த உதயகுமார் பிரசாந்தின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று கார்த்திக் என்பவரிடம் கொடுத்து விட்டு சென்றது தெரியவந்தது. 

காண்டூர் கால்வாயில் பிரசாந்தை தள்ளி விட்டு கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் உதய குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் பிரசாந்தை தள்ளி விட்ட இடத்திற்கு உதயகுமாரை அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து காண்டூர் கால்வாய், திருமூர்த்தி அணை ஆகிய பகுதிகளில் பிரசாந்தின் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் 4 நாட்கள் ஆகியும் அவரது உடல் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில் கொலை வழக்காக மாற்றி உதயகுமாரை கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி அவினாசி கிளை சிறையில் அடைத்தனர். 

கைதான உதயகுமார் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

ஆதியூரை சேர்ந்த பிரசாந்தும், சேத்துமடையை சேர்ந்த உதயகுமாரும் நண்பர்கள் ஆவார். உதயகுமாருக்கு ரூ.45 ஆயிரம் கடன் உள்ளது. இந்த கடனை செலுத்த முடியாமல் அவர் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் பிரசாந்த்  விலை உயர்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார். இது குறித்து உதயகுமாரிடம் அவர் கூறியுள்ளார். 

இதை கேட்ட உதயகுமார் சேத்துமடைக்கு வருமாறு பிரசாந்தை அழைத்து உள்ளார். அங்கு சென்ற பிரசாந்தை, உதயகுமார் காண்டூர் கால்வாய்க்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு வைத்து உதயகுமார் தனது கடனை அடைக்க பணம் கேட்டு உள்ளார். பிரசாந் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். 

அதற்குஅவர் விலை உயர்ந்த மோட்டார்சைக்கள் வாங்கி இருக்கிறாயே, எனக்கு பணம் கொடுக்க ஏன் மறுக்கிறாய் என்று கூறி உள்ளார். இருப்பினும் பிரசாந்த் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உதயகுமார், பிரசாந்தை காண்டூர் கால்வாயில் தள்ளி விட்டு உள்ளார். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பிரசாந்த் காப்பாற்று, காப்பாற்று என்று அபாய குரல் எழுப்பி உள்ளார்.

ஆனால் கல்நெஞ்சம் படைத்த உதயகுமார் பிரசாந்தின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை விற்று கடனை அடைக்க முடிவு செய்தார். ஆனால் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் என்பதால் வாகனத்திற்கு புக் இல்லை. இதனால் வாகனத்தை விற்பனை செய்ய முடியவில்லை. 

இதையடுத்து உதய குமார் காளியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம், தான் வாங்கிய கடனை செலுத்தும் வரை மோட்டார் சைக்கிளை வைத்து கொள்ளுமாறு கூறியதாக தெரியவந்தது. இந்த நிலையில காளியா புரத்தில் கார்த்திக்கிடம் உதய குமார் கொடுத்த மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல்செய்து  நடத்திய விசாரணையில்  உதயகுமார் பிரசாந்த்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.


Comments