திருப்பத்தூர் அருகே பனை மரத்தில் கார் மோதி பாட்டி-பேத்தி பலி!

 

-MMH

              தேனி மாவட்டம், வடுகபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(51). இவர் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் பயணித்துள்ளார். காரை அவரது மருமகன் குருசாமி (36) ஓட்டியுள்ளார். அப்போது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு பகுதியில் உள்ள மொட்டை பிள்ளையார் கோவில் வளைவுப் பகுதியில் கார் வந்த போது திடீரென எதிர்பாராத விதமாக நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. இதனால் காரை ஓட்டிய குருசாமி பிரேக் போட்டுள்ளார்.

இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள பனைமரத்தில் மோதி, பள்ளத்தில் பாய்ந்து நின்றது. இந்த நிலையில், உடனடியாக மீட்புப்பணி மேற்கொள்வதற்காக அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களும், ஊர் பொதுமக்களும் கார் கதவை திறக்க முயன்றனர். ஆனால் திறக்கமுடியவில்லை. பின்னர் இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் கார் கதவை உடைத்து காருக்குள் இருந்தவர்களை மீட்டனர்.

விபத்தில் சண்முகசுந்தரம், அவரது மனைவி முத்துலெட்சுமி (45), மருமகன் குருசாமி மற்றும் இரண்டு மகள்கள், பேரன், பேத்திகள் என 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 9 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமியும், 2 வயது குழந்தை சுபிக்‌ஷாவும் இறந்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பாட்டியும், பேத்தியும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

-அப்துல்சலாம், திருப்பத்துர்.

Comments