குழந்தை இல்லா ஏக்கம்..!!விளைவு மரணம்..!!

      -MMH

       கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன் புதூர் பழைய மணியகாரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாரதி ராஜா (35)விவசாயி. இவரது மனைவி மீனா (29). இவர்களுக்கு 5 மாதத்தில் சந்தரேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.

இந்த குழந்தைக்கு நுரையீரல் பிரச்சனை என்பதால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. அந்த குழந்தைக்கு அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இறந்தது. இதனால் பெற்றோர் கடந்த சிலநாட்களாக மிகவும் வேதனையில் இருந்தனர். 

பாரதிராஜா மட்டும் மனதை தேற்றிக்கொண்டு பணிக்கு சென்று வந்தார். ஆனால் குழந்தை இறந்த துக்கம் தாங்கமுடியாமல் இருந்த மீனா கடந்த சில நாட்களாக கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை பாரதிராஜா மாட்டில் பால் கறந்து விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மீனா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.

அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மீனாவின் தாயார் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments