சிங்கம்புணரி அருகே பாலாற்றில் கை வைத்த மணல் மாபியாக்கள்! நடுஇரவில் மணல் கொள்ளை!

-MMH


சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தின் வழியாக பாலாறு ஓடுகிறது. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பாலாற்றில் நீர்வரத்து இல்லாத நிலையில், ஆங்காங்கே சிறிய அளவில் மணல் திருடப்பட்டு வந்தது. எனவே, மணல் திருட்டை தடுக்க நினைத்த கிராமத்தினர் ஒருமித்த கருத்தோடு யாரையும் மணல் அள்ள விடக்கூடாது எனத் தீர்மானித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென களமிறங்கிய மணல் மாபியாக்கள், அணைக்கரைப்பட்டியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளே ஆற்றின் மையப்பகுதிக்கு சென்று, பாலாற்றின் கரையோரங்களில் முப்பதடி ஆழம் 200 அடி நீளத்திற்கு மிகப்பெரிய பள்ளத்திற்குத் தோண்டி மணல் கடத்தியதாக கூறப்படுகிறது.

அதைக் கண்டு அதிர்ந்த அக்கிராம மக்கள் சிங்கம்புணரி காவல் நிலையத்திலும், வருவாய் துறையினரிடம்  தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில், மீண்டும் நேற்று இரவு லாரி செல்லும் அளவிற்கு பாதை அமைத்து, பாலாற்றில் மணல் மாபியாக்கள் மணல் அள்ளிச் சென்றதாகக் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தொடரும் மணல் திருட்டை தடுக்க வேண்டி புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் எதிர்வரும் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் அறிவித்துள்ளனர்.

இப்பகுதி விவசாயிகளுக்கு ஒரே நீராதாரமாக விளங்கும் பாலாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க, இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

-அப்துல் சலாம்.

Comments