சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு சிறை!!

      -MMH

       1991-96 ஆம் ஆண்டில் சின்னசேலம் தொகுதி எம்எல்ஏவாக பரமசிவம் பதவி வகித்தார். இவர் பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து லஞ்ச ஊழல் தடுப்பு போலீசார் பரமசிவம் மற்றும் அவரது மனைவி பூங்கொடி மீது 1998 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதன் பின்னர் இவ்வழக்கானது விழுப்புரம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், பரமசிவம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 22 லட்சத்திற்கு தனது மனைவி, மகன்கள் மயில்வாகனன் பாபு, கோவிந்தன் ஆகியோரின் பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி இளவழகன் வழங்கிய தீர்ப்பில், "குற்றஞ்சாட்டப்பட்ட பூங்கொடி இறந்துவிட்டதால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து160 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மகன்கள் மயில்வாகனன், கோவிந்தன், மனைவி பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது பொதுமக்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

- ராயல் ஹமீது.

Comments