இன்றைக்கு ஆ.ராசாவுக்கு எதிராக வரும் நாக்குகள், அன்றைக்கு எங்கே சென்றன?
தமிழக அரசியல் தேர்தல் களம் இன்றைக்கு தகதகத்துக் கொண்டிருக்கிறது. பிரச்சார மேடைகள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.
ஆயிரம் விளக்கு தொகுதி பிரச்சாரத்தின் போது திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்த ஒரு கருத்து கடும் கண்டங்களையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆ.ராசா தனது கருத்தை ஒருமுறை மட்டுமே சொல்ல, அதனை முதல்வர் உள்பட அதிமுகவினர் தேர்தல் ஆதாயத்துக்காக ஒவ்வொரு நிமிடமும் சொல்லி மக்கள் மத்தியில் பூதாகரமாக்கி வருகின்றனர்.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற சிறையில் இருந்தவர் ஸ்டாலின். மாவட்டப் பிரதிநிதி, பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர் எனப் படிப்படியாக உயர்ந்து தலைவரானவர். ஆட்சி நிர்வாகத்திலும், எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வர் என உயர்ந்தார். இப்போது முதல்வராகப் போகிறார். அவர் திணிக்கப்பட்டவர் அல்ல. முறைப்படி பெண் பார்த்து, நிச்சயம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி சுகப்பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.
ஆனால், ஜெயலலிதா இறக்கும்வரை எடப்பாடி பழனிசாமியை யாரென்றே யாருக்கும் தெரியாது. அவர் ஊர்ந்துபோய் முதல்வரானார். அதிகாரத்தில் இருப்பதால் அவருக்குப் புகழ். ஓராண்டாக கொடுத்த விளம்பரத்தால் பத்திரிக்கைகள் அவரை மிகப் பெரிய தலைவரைப் போல சித்தரிக்கின்றன. நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறைப் பிரசவம் ஈபிஎஸ். நல்ல குழந்தைக்குத் தாய்ப்பால் போதும். குறைப்பிரசவ குழந்தையைக் காப்பாற்ற டெல்லியில் இருந்து மோடி எனும் டாக்டர் வருகிறார்”
மேற்கண்ட இவைதான் ஆ.ராசா பேசியது. இதற்கு ‘என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்று தனது விளக்கத்தை அளித்துள்ளார். ஆ.ராசா போன்று ஒரு பேச்சாளர், இலக்கியவாதி, திராவிட சித்தாந்தங்களை பளிச்சென பேசும் ஒருவர், வேறு வார்த்தைகளை உபயோகம் செய்து பேசியிருக்கலாம். மேம்பட்ட வார்த்தைகளை உபயோகித்து அவர் பேசியிருக்கலாம். அவர் கூறிய வார்த்தைகள் கண்டனத்துக்குரியதே. அதேபோல், பட்டிமன்ற ஜாம்பவான் லியோனி கூறிய கருத்துகளும் கண்டனத்துக்கு உரியவையே. இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை.
அதேசமயம், லியோனி கூறிய கருத்துகளுக்கு அவர் ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட கார்திகேய சிவசேனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், ஆ.ராசா பேசிய பேச்சிற்கு, இதுபோன்ற வார்த்தைகளை கட்சி ஏற்காது என்று நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு பேசியுள்ளார். யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனத்தை பதிவி செய்துள்ளார்.
இதேபோன்று நாம் தமிழர் கட்சியின் சீமானும் கூட பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளை பதிவிட்டோர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல், சில கட்சிகளும் நடவடிக்கை எடுத்துள்ளன. எனவே, பெண்களை பற்றி பேசக் கூடிய விமர்சன வார்த்தைகளுக்கு அனைவரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதனை கட்சியும் ஏற்றுக் கொள்கிறது அல்லது அவ்வாறு வார்த்தைகளை உபயோக்கிப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.
இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், திடீரென முளைத்து வரும் பெண்ணியக் காவலர்கள்தான். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மகளிர் இயகத்தினர் திரண்டு ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்கின்றனர். அவர் மீது வழக்குத் தொடுக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் அவர் மீது, அவர் உபயோகித்ததை விட கடுமையான வார்த்தை பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. “பெண் குலத்தை இழிவாக பேசுபவர்கள் என்று எடப்பாடி பழனிசாமி தழுதழுத்தக்க பேசும்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிறை சென்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இயல்பான கேள்விகள் நமக்குள் எழுகிறது”.
இது ஒருபுறமிருக்க எஸ்.வி.சேகர் எனும் நடிகர் ஒருவர், 'பத்திரிகைத் துறையில் முன்னேறும் பெண்கள், மேலதிகாரியிடம் அட்ஜஸ்ட் செய்து கொண்டுதான்' என்று கொச்சையாக பேசினார். இவர்கள் பெண் குலத்தில் வரமாட்டார்களா? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இன்றைக்கு திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் பத்திரிகை துறையில் இருக்கும் சிலர், எஸ்.வி.சேகர் கூறியது போன்றுதான் பெண்களை நடத்தினார்களா? என்ற கேள்வியை பொதுவெளியில் அரசியல் விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன், பாஜகவை சேர்ந்தவர்கள் யாரும் இதுபோன்ற பேச்சுகளுக்கு கொந்தளித்தார்களா என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
பாஜக வேட்பாளர் குஷ்பு என்ற தனிப்பட்ட ஒருவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை கண்டித்த கட்சிதான் திமுக. ஆனால், பெண் பத்திரிகையாளர்கள் மீது எஸ்.வி.சேகர் போன்றோர் வைத்த விமர்சனங்களை ஏன் இன்றைக்கு கொந்தளிப்பவர்கள் யாரும் அன்று கேள்வி கேட்கவில்லை என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
பாஜகவின் முகமாக பார்க்கப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு நிகழ்ச்சியில், 'இந்தியாவில் 30% பெண்கள் மட்டும்தான் பெண்மையுடன் இருக்கிறார்கள்' என்றும், 'இந்த பெண்மையுடன் இருக்கும் பெண்களை மட்டும்தான் போற்ற முடியும்' என்று பேசியிருக்கிறார். ஆட்சியாளர்களை பார்த்து ஆண்மையற்றவர்கள் என்றும் அவர் பேசியிருக்கிறார். பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக அதிமுகவின் பெண்கள் அணி நடத்திய அருவறுப்பான போராட்டங்கள் இங்கே மறந்து போய்விட்டனவா? சந்திரலேகா மீது ஆசிட் வீசியவர்களை என்ன செய்து விட்டோம்? வாச்சாத்தியில் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பெண்கள் மீது செய்யப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு எதிராக எத்தனை பேர் குரல் கொடுத்தார்கள்? அல்லது இன்று குரல் கொடுப்பார்களா? இவ்வளவுக்கும் மேலாக, ஜெயலலிதா ஆ.ராசா மீதோ, கனிமொழி மீதோ வைத்த கண்ணியக் குறைவான விமர்சனங்கள்தான் பெண்மையின் இலக்கா? அல்லது அதிமுகவினர் ஆ.ராசா, கனிமொழி மீது அருவருக்கத்தக்க விமர்சனங்களை பிரசாரத்தின் போது முன்வைத்த கதையெல்லாம் எங்கே போய் விட்டது?” என்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்புகின்றனர்.
இவை அனைத்துக்கும் மேலாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பதிபக்தி இல்லாதவர் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொல்லியபோது, சிரித்த நாக்குகள் இன்றைக்கு பழனிச்சாமிக்காக மட்டும் கொந்தளிப்பது ஏன் என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, யார் பேசினாலும் தவறு என்பதை மறுப்பதற்கில்லை. இதனையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இன்று கேள்வி எழுப்புபவர்கள் பேச வேண்டும். இன்று ஆ.ராசா மீது மட்டும் வைக்கப்படும் விமர்சனங்கள் அவர் கூறிய தனிப்பட்ட கருத்துகளுக்கு மட்டுமல்ல. திராவிட சித்தாந்தகளுக்கும், ஆ.ராசா போன்று திராவிட கருத்தியலை பேசுபவர்களை அடக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்படுபவை என்று அரசியல் விவரம் அறிந்தவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
- பாரூக்.
Comments