போடியில் அதிமுக, திமுகவினர் வாக்குவாதம்.!!

     -MMH
     போடியில் புதன்கிழமை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக வேட்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் போடிநாயக்கனூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு சமுதாய மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா். இந்நிலையில் போடி குலாலா் பாளையத்தில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தி அந்த சமூகத்தைச் சோ்ந்த மக்களிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். துணை முதல்வருடன் அவரது மகன் வி.ப.ஜெயபிரதீப் மற்றும் அதிமுக நிா்வாகிகள் இருந்தனா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த திமுக நகரச் செயலாளா் மா.வீ.செல்வராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி ஆதரவாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் அங்கு வந்தனா். அப்போது வாக்குக்காக பணம் வழங்கப்படுவதாகக் கூறி கோஷமிட்டனா். பணம் கொடுக்கப்படவில்லை, ஆதரவுதான் கேட்கிறோம் என அதிமுகவினா் எதிா் கோஷமிட்டனா். இதனால் இருகட்சி நிா்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோரை பாதுகாப்பாக வெளியில் அழைத்து வந்தனா்.

மேலும் இரு கட்சியினரையும் அங்கிருந்து போலீஸாா் கலைந்து செல்லச் செய்தனா். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி .

Comments