பெண் காவலர் கன்னத்தைக் கடித்த ஆண் காவலர்! நாகையில் அதிர்ச்சி....

 

-MMH

                 நாகை அருகே பணி முடிந்து குடியிருப்புக்கு சென்று கொண்டிருந்த பெண் காவலரை வழி மறித்து, பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட காவலரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது புகார் அளிக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். இந்நிலையில், நாகை அருகே பெண் காவலர் ஒருவரை வழி மறித்து ஆண் காவலர் ஒருவரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​கீழே தள்ளி அடித்து மீறல்! கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்தவர் பிரவீனா. இவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று பணி முடிந்து நாகையில் உள்ள காவலர் குடியிருப்புக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் பிரவீனா. அப்போது, அதே குடியிருப்பில் வசித்து வரும் நாகூர் காவல் நிலைய காவலர் சிவகுமார் என்பவர் பிரவீனாவை வழி மறித்துள்ளார். அப்போது, பிரவீனா நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் பெண் காவலரின் கன்னத்தில் கடித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில், சிவகுமாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய பிரவீனாவை பின் தொடர்ந்து சென்ற காவலர், விடாமல் பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பிய பிரவீனா, நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவகுமார் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சிவகுமாரை விசாரித்த போலீசார் அவர் மீது பெண்கள் வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்து கைது செய்தனர்.

பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருவது வழக்கமாக இருந்தாலும், காவல் நிலையங்களிலும் அதுபோன்ற கொடுமைகள் நடப்பது பெருத்த வேதனையை ஏற்படுத்துகிறது. அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது புகார் கொடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் மிரட்டியதாக செங்கல்பட்டு எஸ்.பி. டி.கண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட உயர் அதிகாரி இதுவரை இடைநீக்கம் செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

-மூன்றாம் கண்.

Comments