தொண்டாமுத்தூர் தொகுதி களஆய்வு! கடுமையான போட்டியா..?
கட்சியிலும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மூன்றாவது முறையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினே இந்தத் தொகுதிக்குள் வந்து செல்லும்போது வழக்கோ, சர்ச்சையோ பார்சலாகும். அந்த அளவுக்கு தொண்டாமுத்தூர் மீது அதிக கவனம் செலுத்துவார் வேலுமணி. இந்தமுறை அவரை வீழ்த்தியே ஆக வேண்டுமென்று முடிவெடுத்த தி.மு.க., கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டாமுத்தூரில் நேரடியாகக் களமிறங்குகிறது.
தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகளை ஓரளவுக்குச் சரிசெய்திருக்கிறார் வேலுமணி. தொகுதி மக்கள் வீட்டில் நல்லது கெட்டது என்றால் பெரும்பாலும் தலைகாட்டிவிடுவார். ஜெயலலிதா பிறந்தநாளில் வீடுதோறும் ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் செல்லும். தொகுதியின் சாலைகள் ‘பளிச்’ என மின்னுவதைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் வேலுமணிக்கு ப்ளஸ். ஆனால், காலைச் சுற்றியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் அவரை இறுக்க ஆரம்பித்திருக்கின்றன. பா.ஜ.க உடனிருப்பதால், தொகுதிக்குள் இருக்கும் சுமார் ஒரு லட்சம் சிறுபான்மையினர் சமூக வாக்காளர்களிடம் அதிருப்தி மனநிலை ஏற்பட்டிருப்பது வேலுமணிக்கு மைனஸ். ஆனாலும், தனது தனிப்பட்ட செல்வாக்கால் இஸ்லாமியர் ஓட்டுகளைக் கவர்ந்துவிடலாம் என்று நம்புகிறார் வேலுமணி. இதைக் கணக்கிட்டே வேலுமணியும், அவரின் அண்ணன் அன்புவும் ஜமாத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார்கள்.
வேலுமணியைச் சுதந்திரமாகவிட்டால், மற்ற தொகுதிகளில் அவர் கவனம் செலுத்துவார் என்பதற்காகவே கார்த்திகேய சிவசேனாபதியை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. தனக்கு அளிக்கப்பட்ட அசைன்மென்ட்டைக் கச்சிதமாக நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி. அவருக்கு ஆதரவாக தி.மு.க நிர்வாகிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள் என்று பெரும் படையே வேலை செய்கிறது. சேனாபதி காங்கேயத்தைச் சேர்ந்தவர் என்பதால், ‘வெளியூர்க்காரருக்கு இந்தத் தொகுதியைப் பற்றி என்ன தெரியும்?’ என்று பிரசாரம் செய்கிறது அ.தி.மு.க. அவர் மீதிருக்கும் வரதட்சணைப் புகார், குழந்தைக் கடத்தல் புகார்களை வைத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குகின்றனர்.
தொகுதிக்குள் கணிசமாக உள்ள சிறுபான்மைச் சமூகத்தினரின் வாக்குகளை அள்ளிவிடலாம் என்பது தி.மு.க-வின் திட்டம். அதற்கு செக் வைப்பதுபோல, மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியிலிருக்கும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஷாஜகான் களமிறங்குகிறார். சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு, திடீரென்று ‘போட்டியிடப் போவதில்லை’ என்று பின்வாங்கிய மன்சூர் அலிகான், மீண்டும் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார். இதனால், சிறுபான்மைச் சமூகத்தினர் வாக்குகள் சிதற வாய்ப்பிருக்கிறது. இன்னொரு பக்கம், தொகுதிக்குள் கவுண்டர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இதனால், தொகுதிக்குள் கணிசமாக உள்ள ஒக்கலிகக் கவுடர் உள்ளிட்ட பிற சமூகத்தினர் அ.தி.மு.க அதிருப்தி மனநிலையில் இருக்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் போட்டி கடுமையாகவே இருக்கிறது..!!
-S.கிரி,A.ஈஷா.
Comments