0, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் விருப்பம்: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!!

     -MMH
     10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்- லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2 நாட்களாக ட்விட்டரில் 'கேன்சல்போர்ட்எக்ஸாம்ஸ்2021'( cancelboardexams2021) என்ற ஹேஷ்டேகும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வுகளை ரத்து செய்யவோ அல்லது ஆன்லைனில் நடத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால், மாணவர்கள் தேர்வு எழுத போதுமான கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தேர்வு நேரத்தில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேன்ஜ்.ஓஆர் என்ற அமைப்பு கூறுகையில், "இந்தியாவில் நாளுக்குநாள் சூழல் மோசமாகி வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்த அளவு இருந்தபோது, தேர்வுகளை ரத்து செய்திருக்க வேண்டும்.

ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளநிலையில் பள்ளிகளைக் திறக்கத் திட்டமிடுகிறார்கள்.  இந்த விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு அனைத்துத் தேர்வுகளையும் இந்த ஆண்டு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும், மாணவர்கள் அதிகமான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா கார்க் ட்விட்டரில் கூறுகையில்,"மத்திய அரசு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை குறைந்தபட்சம் ஒரு மாதம் ஒத்திவைத்து, அதன்பின் சூழலுக்கு ஏற்பட முடிவு எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மாணவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "கொரோனா காலத்தில் மாணவர்கள் ஏற்கெனவே ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். வகுப்புகள் ஆன்-லைனில் நடத்தப்படும்போது, தேர்வுகளையும் ஆன்-லைனிலேயே நடத்த வேண்டும். அல்லது மாணவர்களின் இன்டர்னல் மதிப்பீடு அடிப்படையில் தகுதி பெறச் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஜனவரி மாதத்தில் செய்முறைத் தேர்வுகளும், பிப்ரவரி மாதத்தில் தேர்வுகள் தொடங்கி மார்ச் இறுதியில் தேர்வுகள் முடிந்துவிடும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூனில் முடிகிறது.

இதற்கிடையே சிபிஎஸ்இ வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில்,  "மாணவர்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு அவரால் செய்முறைத் தேர்வு எழுத முடியாமல் போனால், அந்த மாணவருக்கு மட்டும் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு நடத்திக்கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டது.

சிஐஎஸ்சிஇ கல்விவாரியத்துக்கும் இதே நடைமுறை தொடரும் என வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேரி ஆரத்தூன் தெரிவித்துள்ளார்.

-சோலை ஜெய்க்குமார், Ln.இந்திராதேவி முருகேசன்.

Comments