10 ஆண்டாக எதுவுமே செய்யல! ஓபிஎஸ் மீது சாணம் வீசிய அதிமுக தொண்டர்!

 

-MMH

   பிரச்சாரத்தின் போது துணை முதல்வர் ஓபிஎஸ் மீது சாணம் வீச முயற்சித்த தொண்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாகிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் பிரச்சாரம் ஓய்கிறது.  தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், அமமுக சார்பில் எம்.முத்துசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் பி.கணேஷ் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.பிரேம் சந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், போடி தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தார்.

அங்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெட்டிக்கடையின் பின்னால் ஒளிந்திருந்த நபர், திடீரென வெளியே வந்து, 'கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை' என்று கூச்சலிட்டுக்கொண்டே தனது கையில் இருந்த சாணத்தை ஓபிஎஸ் மீது வீசியுள்ளார். ஆனால் அது ஓபிஎஸ்ஸிற்கு பாதுகாப்பாக இருந்த போலீசார் மீது விழுந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சாணம் வீசிய நபரை துரத்திப் பிடித்து போடி புறநகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. துணை முதல்வர் மீது சாணம் வீசிய நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் நாகலாபுரம் அடுத்த கெஞ்சம்பட்டியை சேர்ந்த முருகன் என்று தெரியவந்துள்ளது. இவர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்றும், நாகலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸின் உறவினர் என்றும் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் மீதான அதிருப்தியால்தான் இப்படியொரு செயலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

-பாரூக்.

Comments