உக்கடம் பெரியகுளம் கரை அருகே வாக்கிங் பாதைக்காக 12 அடி உயரத்தில் கட்டிய தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது!!
கோவை மாநகராட்சியில், சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்துவருகின்றன. குளக்கரைகளை அழகுபடுத்தி வாக்கிங் பாதை, சைக்கிள் பாதை, பூங்கா அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன்படி, உக்கடம் பெரியகுளம் கரை அருகே அசோக் நகர் என்ற பகுதியில், சமீபத்தில் வாக்கிங் பாதைக்காக 12 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.
கோவையில் கடந்த சில நாள்களாக வெப்பச் சலனம் காரணமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. முக்கியமாக, நேற்று இரவு மாநகர் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால், அந்தத் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்தத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு சில மாதங்கள்தான் ஆகின்றன. தரமற்ற பணிகளாலேயே இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சுவர் இடிந்து விழுந்த பகுதியில்தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடமாடிக்கொண்டிருப்பார்கள்.
அதிர்ஷ்டவசமாக, சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் இடிந்து விழுந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றியிருக்கிறார்கள். சுவர் இடிந்து விழுந்ததில், அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே, "கோவையில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சாக்கடையாக மாறியிருக்கும் குளங்களைச் சரிப்படுத்தாமல், உயிர்ச் சூழலைச் சிதைத்து அலங்காரம் மட்டுமே செய்கின்றனர்" எனச் சுற்றுசூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவந்தனர். அதேபோல, கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்துப் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகராட்சி இணையதளத்திலேயே, `View our smart city website' (எங்கள் ஸ்மார்ட் சிட்டி இணையதளத்தை பார்க்க) என்று ஒரு பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை க்ளிக் செய்தால், அது வேறொரு டிராவல் செய்தி தொடர்பான இணைய பக்கத்துக்குச் செல்கிறது. இனியாவது அதிகாரிகள் வெளிப்படத்தன்மையுடன் செயல்பட்டு, மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் கோவைவாசிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-சுரேந்திர குமார்.
Comments