ஸ்டாலின் மகள் வீட்டிலிருந்து வெறுங்கையோடு வெளியேறிய வருமான வரித்துறை! இருந்தது ரூ.1,36,000 மட்டுமே!

 

-MMH

தமிழக தேர்தல் களம் பரபரப்பான நிலையை எட்டியிருக்கும் தருணத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டிலும் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஸ்டாலின் மகள் செந்தாமரை தனது கணவர் சபரீசனுடன் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல், மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையிலிருந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று காலை புறப்பட்ட ஸ்டாலின் திருச்சியிலிருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்த நிலையில்தான் ரெய்டு தகவல் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டது. உடனடியாக இதுகுறித்த விவரங்களை சேகரித்துக் கொண்ட ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் இடையில் பேசினார்.

இந்த வருமானவரிச் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் சுமார் 12 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது. இந்தச் சோதனையிம் போது சபரீசன் வீட்டில் ரூ.1.36 லட்சம் மட்டுமே அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. வீட்டுச் செலவுக்காக வைத்திருந்த அந்தப் பணத்தையும் அதிகாரிகள் ரசீது போட்டு சபரீசனிடம் திருப்பிக் கொடுத்து விட்டனர்.

முன்னதாக, வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கையில், “ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம், சூரிய மின்சக்தி என்பன உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தேர்தலுக்கான பணப்பட்டுவாடாவை இவர்கள் செய்வதாகவும் புகார்கள் வந்தன, அதனடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது” என்று கூறப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சோதனையில் அதிகாரிகள் எந்த ஆவணத்தையும், ரொக்கத்தையும் கைப்பற்றவில்லை என்பது தெரியவருகிறது.

-ராயல் ஹமீது.

Comments