கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்- 4 பேர் கைது!!!

    -MMH
     கோவை அன்னூரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் அன்னூர் கடைவீதியில் இமானுவேல் என்பவரது கடையில் சோதனை நடத்தினர் போலிஸார்.

அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.  கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் தனக்கு இந்த குட்காவை விற்பனை செய்ததாக போலிஸார் விசாரணையில் இமானுவேல் தெரிவித்தார். போலீசார் அன்னூர் மேட்டுப்பாளையத்தில் உள்ள பூபாலனுக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்தனர். அதில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 950 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பூபாலனை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இந்த 2 கடைகளுக்கும் கருமத்தம்பட்டி அடுத்த சோமனூர் பகுதியில் உள்ள கிஷோர் ஹதாஜி என்பவர் அவர்களுக்கு குட்காவை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சோமனூர் பஸ் நிலையம் முன்பு மளிகை கடை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் ஹதாஜி (வயது 42) என்பவர் நடத்தி வந்த க குடோனில் சோதனை செய்தபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1700 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் நந்தகுமார்(46) என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து கிஷோர் ஹதாஜி குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் சோதனை செய்ததை அறிந்த கிஷோர் ஹதாஜி தப்பி ஓடிவிட்டார். இந்தநிலையில் கடையில் வேலை செய்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கன்னாராம் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். குட்காவை பதுக்க இடம் கொடுத்ததாக குடோன் உரிமையாளர் நந்தகுமாரும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான கிஷோர் ஹதாஜியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments