வாகன ஓட்டிகளுக்கு அடுத்த அதிர்ச்சி! சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்வு!!

-MMH

            வாகன ஓட்டிகளுக்கு அடுத்த அதிர்ச்சி: தமிழகம் முழுவதும் 26 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்வு, நள்ளிரவு முதல் அமல்..! தமிழகம் முழுவதும் 26 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டண உயர்ந்துள்ளது எனவும் நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் ஏற்கனவே அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.  

அதாவது கார், ஜீப், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 85 ரூபாயாக உள்ளது. இரண்டு அச்சு கனரக வாகனம் மற்றும் பேருந்திற்கு 270 ரூபாய் இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 290 ரூபாயாக உள்ளது.மூன்று அச்சு கனரக வாகனங்களுக்கு 295 ரூபாயாக இருந்த கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 315 ரூபாயாக உள்ளது.மூன்று முதல் ஆறு அச்சு கொண்ட கனரக வானங்களுக்கு 425 ரூபாயாக இருந்த கட்டணம் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 450 ரூபாயாக உள்ளது. 7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு 520 ரூபாயாக இருந்த கட்டணம் 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 550 ரூபாயாக உள்ளது. 

உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ஏற்கனவே சுங்க கட்டணம் மிக அதிகமாக உள்ளது என்றும் சுங்க கட்டணத்தை நீக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்று வாகன உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா கால பொருளாதார நெருக்கடியில் இருந்து சற்று மீண்டுள்ள நிலையில் இந்த கட்டணம் உயர்வு சுமையாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும், சுங்க சாவடிகளில் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளும் நடைபெறாமல் சுங்க கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ருக்மாங்கதன் சென்னை.

Comments