உலக மகா நடிப்புடா சாமி ஓபிஎஸ் குறித்து ஸ்டாலின்!
போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் தங்கத் தமிழ்ச்செல்வன், கம்பம் தொகுதி வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் மகராஜன் பெரியகுளம் வேட்பாளர் சரவணகுமார் அகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், பன்னீர்செல்வத்தை, “ஓ.பி.எஸ். இந்த மாவட்டத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை” என்று முதல்வர் பழனிச்சாமி பேசியிருக்கிறார். பன்னீர்செல்வத்தை இந்த மாவட்டத்தின் கொடை என்று சொல்லி, நீங்கள் இங்கேயே இருங்கள், வெளியில் வந்து விடாதீர்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இது புரியாமல் ஓ.பி.எஸ். தலையாட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அ.தி.மு.க.விற்குத் துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார். அவ்வாறு பார்த்தால் அ.தி.மு.க.விற்கு முதன்முதலில் துரோகம் செய்தவர் யார்? அதிமுக ஆட்சிக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 11 பேர் ஓட்டுப் போட்டார்களா? இல்லையா? அந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டும் போட்ட 11 பேரும் டெபாசிட் வாங்கலாமா?
ஒரு தியான நாடகத்தை நடத்தினார். பதவிக்காகத் தர்மயுத்தம் நடத்தினார். 'ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அதை விசாரிக்க விசாரணைக் கமிஷன் வேண்டும்' என்று கேட்டாரா? இல்லையா? ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உட்கார்ந்து
40 நிமிடம் தியானம் செய்தார். ஜெயலலிதாவின் ஆன்மாவோடு பேசினார். “உங்கள் சாவுக்கு யார் காரணம்? அதைக் கண்டு பிடிக்காமல் விடமாட்டேன். அதற்கு விசாரணைக் கமிஷன் வேண்டும்” என்று சொன்னாரா? இல்லையா? ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் கமிஷன் ஓபிஎஸ்-ஐ விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி பலமுறை
சம்மன் அனுப்பியது. அவர் ஒருமுறையாவது அந்த விசாரணைக் கமிஷன் முன் ஆஜரானாரா? ஜெயலலிதா இருந்தவரை நின்று தரையைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தவர். இப்போது ஜெயலலிதாவைத் தலைமுழுகி விட்டார். ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்த இவரை இந்தத் தேனி மாவட்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவரை இந்தத் தேனி மாவட்டத்திலிருந்து விரட்ட வேண்டுமா? வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின் இந்த தொகுதிக்கு ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நேற்று மோடி தாராபுரம் வந்த போது அவரை பார்த்து ஓ.பி.எஸ். “உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான்” என்று பாராட்டிப் பேசுகிறார். இவ்வளவு நாட்களாக பத்திரிகைகளில் ஓ.பி.எஸ். தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று விளம்பரம் அவரே கொடுத்துக்கொண்டிருந்தார். இப்போது ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என்று சொல்கிறார். இது என்ன நடிப்பு. சினிமாவில் ஒரு டயலாக் வரும், “உலக மகா நடிப்புடா சாமி” அதுபோலத்தான் இருக்கிறது” என்று விமர்சித்தார்.
-ராயல் ஹமீது.
Comments