இறப்பிலும் இணைபிரியாத இந்து-முஸ்லிம் நண்பர்கள்!

 

-MMH

40 ஆண்டுகளாக இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்த இந்து- முஸ்லிம் நண்பர்கள் ஒரே நாளில் உயிரிழந்து, சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில், மசூதி தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் அதே தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இவரது வீட்டின் எதிர்புறம் வசித்து வருபவர் ஜெயிலாபுதீன். இவர் ரைஸ் மில் நடத்தி வருகிறார்.

இவர்களது இரண்டு குடும்பங்களும் இரண்டாவது தலைமுறையாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதேபோன்று மகாலிங்கமும், ஜெய்லாபுதீனும் பள்ளிப் பருவ காலத்தில் இருந்து இணைபிரியாத நண்பர்களாக இதுவரை இருந்து வந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் சில தினங்கள் முன்பு (ஏப்.06), திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜெயிலாபுதீன் சிகிச்சை பலனின்றி புதனன்று (ஏப்.07) உயிரிழந்தார். இவரின் இறப்புச் செய்தியை கேட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கம் மயக்கமடைந்த நிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் அவரது உயிரும் பிரிந்தது. இறப்பிலும் இணைபிரியாமல் நண்பர்கள் உயிரிழந்த இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து இருவரது உடல்களும் கொண்டுவரப்பட்டு, அவரவர்கள் வீட்டில் சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன. இரு நண்பர்களும் இறந்தது இரு மதத்தினர் இடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து இருவரது மகன்களும் கூறுகையில், 'எங்களது தாத்தா காலம் தொடங்கி எங்களது தந்தை காலம் வரை இரு குடும்பமும் மாமன், மைத்துனர் என்ற முறையில் ஒன்றாகவே வாழ்ந்து வந்துவிட்டோம். இதன் பிறகும் எங்களது காலம் மற்றும் சந்ததியினர் காலமும், தொடர்ந்து இரு குடும்பமும் இதேபோன்று ஒற்றுமையாகவே இருந்து, இவ்வுலகிற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குவோம்' எனத் தெரிவித்தனர்.

-ராயல் ஹமீது.

Comments