உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பின் லட்சணத்தை நாடே அறியும்! யோகி ஆதித்யநாத்திற்கு ஸ்டாலின் தரமான பதிலடி!!

 

-MMH

ஆமை புகுந்த வீடும், பாஜக புகுந்த நாடும் உருப்படாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜகவை விமர்சித்துள்ளார். கோவை மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் பேசும்போது, 'முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமைத் திறன் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டு்ள்ளனர். தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்து, மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதுதான் அவரது வேலை. இதையெல்லாம், மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் நான்கு நாளில் தெளிவாக தீர்ப்பு கூற உள்ளனர்.

புற்றுநோய் வரவழைக்கும் குட்காவில் ஊழல் செய்த அரசு இது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி நடத்திய அரசு இது. சாத்தான்குளத்தில் தந்தை-மகனை லாக்அப்பில் அடித்துக்கொன்ற அரசு இது. சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது தடியடி நடத்திய அரசு இது.

இது, பொல்லாத அரசு என்பதற்கு, பொள்ளாச்சி ஒன்றே சாட்சி. பொள்ளாச்சியில் நடந்த கொடுமை நம் நெஞ்சைப் பதற வைக்கிறது. அதிமுக ஆட்சியில் 3 வருடமாக அந்தக் கொடுமை நடந்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை வீசியது. இப்போது எடப்பாடி எதிர்ப்பு அலையும் சேர்ந்து வீசுகிறது. அதனால், இந்த தேர்தலில், அதிமுக-பா.ஜ கூட்டணி வாஷ்அவுட் ஆகிவிடும். இந்தத் தேர்தலில் பா.ஜ மட்டுமின்றி, அதிமுகவும் வெற்றி பெற்றுவிடக்கூடாது. தைரியம் இல்லாத, எதற்கும் உதவாத இந்த அதிமுக ஆட்சியைத் தூக்கிய எறிய வேண்டும். தமிழ் மண்ணில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது' என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

கோவை கவுண்டம்பாளையத்தில் பேசிய ஸ்டாலின், 'ஆமை புகுந்த வீடும், பாஜக புகுந்த நாடும் உருப்படாது. நாட்டிலேயே உத்தரப்பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம். பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பின் லட்சணத்தை நாடே அறியும். அங்கிருந்து வந்த யோகி ஆதித்யநாத், திமுக பற்றியும் தமிழ்நாடு பற்றியும் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?' என்றும் பேசினார்.

-பாரூக்.

Comments