ஹெல்மெட் அணியாத பிரச்சினையில் கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

-MMH

                    ஹெல்மெட் அணியாததால், வாகன விபத்து வழக்கில் நஷ்ட ஈட்டுத்தொகையை குறைக்கக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளா  மாநிலம், மலப்புரம் அருகே திரூர் பகுதியை சேர்ந்தவர் முகமது குட்டி. இவர் கடந்த  2007 ஆகஸ்ட் 8ம் தேதி, உறவினரது பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திசைமாறி வந்த ஜீப் ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் முகமது குட்டி பரிதாபமாக இறந்தார்.  இதையடுத்து நஷ்ட ஈடு கோரி திரூர் மோட்டார் வாகன தீர்ப்பாணையத்தில் அவரது உறவினர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

அதன்படி ₹2.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், முகமது குட்டி ஹெல்மெட் அணியாததால், நஷ்ட ஈட்டுத்தொகையில் 20% குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து முகமது குட்டியின் உறவினர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதுபோல நஷ்ட ஈடு வழங்கக்கூடாது என நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனமும்  உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த இரு மனுக்களும் நீதிபதி குஞ்சு கிருஷ்ணன் முன் விசாரைணக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக நஷ்ட ஈட்டு தொகையை குறைக்கக்கூடாது. பைக்கை ஓட்டியவரோ, பின்  இருக்கையில் அமர்ந்திருந்தவரோ ஹெல்மெட் போடாததால் இந்த விபத்தும், இறப்பும் ஏற்படவில்லை. திசைமாறி வந்த வாகனம் மோதி  விபத்து நடந்துள்ளது. எனவே, இந்த விபத்தில் ஹெல்மெட் போடாததை ஒரு குற்றமாக்க் கருத வேண்டியதில்லை.

ஆனால், இந்தத் தீர்ப்பை வைத்துக்கொண்டு, ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கலாம் என நினைக்கக்கூடாது. மோட்டார் வாகனச் சட்டம்  129ன்படி, பைக்குகளில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது. இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இந்தச் சட்டத்தின்படி அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

- பாரூக்.

Comments