குப்பை தொட்டிகளை திருப்பி வைக்க கோரிக்கை!!
திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரைவு சாலையோரம் காவு வாங்க காத்திருக்கும் குப்பை தொட்டிகளை திருப்பி வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் 3.83 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து சேகரமாகும் குப்பையை சேகரிக்க, ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை தொட்டிகளின் பக்கவாட்டில் கம்பி ஒன்று உள்ளதால் லாரிகளில் குப்பையை சேகரிக்கும் போது துாக்கி கவிழ்க்கும் வகையில் பிடிமானத்திற்காக அவை அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு, தினசரி குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபடும் லாரி ஊழியர்கள், தொட்டியின் பிடிமான கம்பி பக்கத்தை, சாலையைப் பார்த்து வைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், நிலை தடுமாறும் பட்சத்தில் குப்பை தொட்டியின் பிடிமான கம்பியில் இடித்து, காயமுற அதிகம் வாய்ப்புள்ளது. சில இடங்களில் கம்பியில் மோதி யாரும் காயமடையாதவாறு கோணிகளை சுற்றி வைத்துள்ளனர். பெரும்பாலான குப்பை தொட்டிகளில் அவை பின்பற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, நெடுஞ்சாலை விரைவு சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியின் பிடிமான கம்பிகள் சாலை பக்கமாக இல்லாமல் திருப்பி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-கார்த்திக், தண்டையார்பேட்டை.
Comments