சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பி, தடுப்பூசி போடுவதைத் தவிர்க்க வேண்டாம்.!! - கோவை மருத்துவர்கள் அறிவுரை!!

     சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பி, கொரோனா தடுப்பூசி போடுவதைத்  தவிர்க்க வேண்டாம் என  கோவை பிரபல மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

டாக்டர் பக்தவத்சலம் (சேர்மன், கே.ஜி., மருத்துவமனை): "முன்பு இந்நோய்க்கு மருந்து இல்லை, உயிர்ச்சேதம் அதிகமானது. இன்றைக்கு மருந்து வந்து விட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம். இப்போது மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி குறைவாக உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். "

டாக்டர் பாலவெங்கட் (மயக்கவியல் சிறப்பு மருத்துவ நிபுணர், கங்கா மருத்துவமனை) : "இரண்டாவது அலையின் வேகம் அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் உயிருக்கு பாதுகாப்பு. டாக்டர்கள் நர்சுகள் மற்றும் முன்னணி பனியாளர்கள் தடுப்பூசி போட்டுகொண்டதால்தான், இப்போது தைரியமாக பணி செய்கின்றனர். வேக்சின் போட்டுக்கொண்ட டாக்டர்கள் யாருக்கும், இவரை எந்த பாதிப்பும் இல்லை.

வாட்ஸ்ஆப் வதந்தியை நம்பி, ஊசி போடாமல் இருந்தால் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியாது. முதியவர்கள் சர்க்கரை, பிரஷர் போன்ற எந்த நோய் இருந்தாலும், வேக்சின் போட்டுக்கொள்ளலாம்."

டாக்டர் திவ்யா(சிறப்பு மருத்துவ நிபுணர், கே.எம்.சி.எச்.) : "இரண்டாவது அலையின் வேகம் அதிகம். இந்த தொற்றைப்  பொறுத்தவரை மைல்டு, மீடியம், ஹெவி என, மூன்று வகையாக உள்ளன. லேசான தொற்றால் பாதிப்பு இல்லை.

எல்லோரும் டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும். அவசியம் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் தடுப்பூசி போட்டு கொண்டதால் தொற்று மிகவும் குறைந்துள்ளது. தடுப்பூசி போடுவதை அரசு அதிகரிக்க வேண்டும்.

சினிமா தியேட்டர்கள், மால்களை மூடுவது அவசியம். திருமணம் மற்றும் விசேஷங்களை ஒரு மாதம் தவிர்த்தால், தொற்று குறைந்துவிடும்." 

டாக்டர் பட்டாபிராமன் (நுரையீரல் துறை சிறப்பு மருத்துவ நிபுணர், ராயல் கேர் மருத்துவமனை): "கொரோனா தடுப்பு நடவடிக்கையை பொறுத்தவரை, அரசு செய்ய வேண்டியதை சரியாக செய்து வருகிறது. பொதுமக்கள்தான் சரியாக இல்லை.

மாஸ்க் போட்டுக்கொண்டு, கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியைக்  கடைப்பிடித்தால், தொற்று பரவாது. ஊரடங்கு போடும் நிர்பந்தத்தை, அரசுக்கு நாம் ஏற்படுத்த கூடாது. இரவு நேர ஊரடங்கு போடுவது நல்லது. இதனால் பொருளாதாரம் பாதிக்காது."

டாக்டர் செந்தில் (பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர், ராயல் கேர் மருத்துவமனை): "கொரோனா பரவலைத்  தடுக்க, மாஸ்க் போடுவதுதான் முக்கியம். நாங்கள் எல்லாம் மாஸ்க் போட்டுக்கொள்வதால்தான், தொற்று பயம் இல்லாமல் பணி செய்ய முடிகிறது. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசு, பொழுது போக்கு சார்ந்த எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த அனுமதிக்க கூடாது. அத்தியாவசிய தேவை எது என்பதை அறிந்து, அதற்கு மட்டும் அனுமதி கொடுத்தால் போதும். தடுப்பூசி போடாதவர்கள் உடனே போட்டுக்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பி, ஊசி போடுவதைத் தவிர்க்க வேண்டாம்."

-சோலை. ஜெய்க்குமார்/ Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments