கர்ப்பிணி பெண்ணிடம் செயின் பறிப்பு!!

     -MMH

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகர், தர்கா ரோடு பகுதியில் கீதா என்ற 24 வயது கர்ப்பிணி பெண்ணிடம் கடந்த 9-ந்தேதி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது வீட்டு காம்பவுண்டு சுவரில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு பூஜை செய்துகொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கீதாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயினை பறித்தான். இதனால் நிலை குலைந்து அதிர்ச்சி அடைந்து கீதா சத்தம் போட்டுக்கொண்டே செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். 

இருப்பினும் கொள்ளையன் கீதாவை தரதரவென இழுத்துச் சென்றுள்ளான். இதனை அந்த வழியாக சென்ற பொது மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். ஆனாலும் யாரும் அருகில் சென்று பிடிப்பதற்கு முயற்சி செய்யவில்லை.


இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்திலும் வெளியாகி பெரும் பரபரப்பைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பல்லாவரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்பாபு தலைமையிலான தனிப்படையினர் செயின் பறித்த வாலிபரை பிடிக்க அதிரடி வேட்டையில் இறங்கினர்.

போலீஸ் விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரின் பெயர் தினேஷ் குமார் வயது 23 என்பதும் மதுரை அந்தியூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

கர்ப்பிணிப் பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று செயின்பறிப்பில் ஈடுபட்ட தினேஷ்குமார் வேகமாக ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்லும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தன. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் யார் என்பதையும் அந்த வாகனத்தின் பதிவு எண்ணைக்கொண்டு கண்டு பிடித்தனர். தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டியை சேர்ந்த கிரண்குமார் வயது 24, தினேஷ்குமாரின் நண்பன் ஆவான்.

இவர்கள் இருவருரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கர்ப்பிணி பெண்ணிடம் செயினை பறித்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் 75 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்ததும் தெரிய வந்தது.

அப்போது பிடிக்க சென்ற மூதாட்டியின் வயதான கணவரையும் இருவரும் கீழே தள்ளிவிட்டு தப்பி உள்ளனர். செயின் பறிப்பு கொள்ளையர்களில் தினேஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும் உள்ளது. மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இருவரும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்றும் இதற்காக போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளனர். பல்லாவரம் பகுதியில் தங்கியிருந்து குரோம்பேட்டை, தாம்பரம், பெரவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று போலீசார் விசாரணையில் தெரிவித்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ்பாபு தலைமையிலான தனிப்படை போலீசாரை கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-H.முகமது சைஃபுல்லா.

Comments