யுகாதி திருநாள் கொண்டாட்டம் கோலாகலம்!!

 

-MMH

இன்று (13.04.2021) செவ்வாய்க்கிழமை மங்களகரமான நாளில்  யுகாதி திருவிழா கோலாகலமாக தென்மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. 

யுகாதி திருநாள்: உகாதி (அ) யுகாதி திருநாள் தெலுங்கு மற்றும் கன்னட வருட பிறப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இது சந்திரமான நாட்காட்டி அடிப்படையில் யுகாதி வருடத்தின் முதல் தினமாகும். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் மாநிலங்களில் விமரிசையாக கொண்டாப்படுகிறது யுகம்+ஆதி = யுகாதி யுகத்தின் ஆரம்பம் என்ற பொருள்படுகிறது. பிரம்மன் இன்னறைய தினத்தில் தான் உலகை படைத்தார் எனக் கூறப்படுகிறது. சைத்ர மாதத்தின் முதல் தினமாகும்.

யுகாதி திருநாள் ஆங்கில மாதம் ஏப்ரல் முதல் வாரம் அல்லது மார்ச் கடைசி வாரம் வசந்த காலத்தில் வருகிறது. பூரண பிரதமை திதி தினமே யுகாதி திருநாள் ஆகும். யுகாதியன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கொண்டு உற்றார் உறவினர்களுடன் அனைவரும் கொண்டாடுகின்றனர். யுகாதி பச்சடி என்பது அறுசுவையும் கலந்த ஒரு பச்சடி ஆகும். வேப்பம் பூ, வெல்லம், மாங்காய், உப்பு, புளி, காரம் என அனைத்தும் கலந்து செய்யப்படுகிறது.

ஒரு ஆண்டு என்பது இன்பம் மற்றும் துன்பம் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. மேலும் பூர்ண போளி என்கின்ற இனிப்பு பண்டம் சமைக்கின்றனர். இந்த நாளை மகாராஷ்டிராவில் குடி பாடவா என்றும், மணிப்பூரில் சாஜிபு நொங்மா பன்பா என்றும், சிந்து இன மக்கள் சேட்டி சந்த் என்றும் கொண்டாடுகின்றனர்.பொதுவாக யுகாதி பண்டிகை தமிழ் வருட பிறப்பை ஒட்டியே வருவது வழக்கம். 

தமிழ் நாட்டில் உகாதி தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி  பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர். மதம், மொழி ,ஜாதி பாகுபாடின்றி  அனைவரும் இந்த நாளில் இன்புற்று இருக்க இறைவனை பிராத்தனை செய்து கொண்டு இத்திருநாளை கொண்டாடுவோம்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V.ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments