பிணைய பத்திரத்தை மீறி குற்றச் செயலில் ஈடுபட்டதால் மீண்டும் சிறையில் அடைப்பு!!
பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்கிற சுருட்டை (22) இவர் மீது கொலை, கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி பொள்ளாச்சி தாசில்தார் தணிகவேலிடம் 6 மாத காலத்திற்கு எந்தவிதமான குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று ஹரிபிரசாத் பிணைய பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி ஹரி பிரபு என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது செல்போனை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரி பிரசாத்தை கைது செய்தனர்.
இதற்கிடையில் பிணைய பத்திரத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட ஹரிபிரசாத்தை போலீசார் நேற்று சப் கலெக்டரும், நிர்வாகத்துறை நீதிபதியுமான வைத்தியநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்கு பின்பு வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து போலீசார் ஹரி பிரசாத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-M.சுரேஷ்குமார்.
Comments