பல மாதங்களுக்குப் பின் நாளை முழு ஊரடங்கு!!

 

-MMH

             கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த ஊரடங்கானது 75 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு பின்பு பல்வேறு கட்ட தளர்வுகளுடன்  படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்தது. தற்பொழுது கொரொணா நோய்த்தொற்றின்  இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய சூழ்நிலை மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு மற்றும்  ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு   வரும்  முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் கவனமுடன் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கின்போது, தனியார் மற்றும் பொது போக்குவரத்து, வாடகை ஆட்டோ, வாடகை கார் மற்றும் தனியார் வாகன போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.

இதன் காரணமாக, தொலைதூரம் செல்லும் பேருந்துகள் தற்போது பகல் நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் இரவு நேரத்தில் அனுமதிக்கப்படுகிறது. பெட்ரோல் பங்க்குகளும் தடையில்லாமல் இயங்கி வருகின்றன. அதே நேரத்தில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி கிடையாது.

முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினரும் தொடர்ந்து பணியாற்றலாம். அதேபோல, தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை கண்காணிப்பதற்காக 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V.ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments