லாரி மோதி பெண் காவலர் மரணம்! தேர்தல் பணியில் துயரம்!

 

-MMH

            தேர்தல் பறக்கும் படையினர் கார் மீது லாரி மோதியதில் பெண் காவலர் மரணமடைந்தார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர், குடியாத்தம் நோக்கிக் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற ஒரு லாரி, பறக்கும் படையினரின் கார் மீது நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளமாக நொறுங்கியது.

காரில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய பெண் காவலர் மாலதி(40), சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த மற்ற மூவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மாலதியின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் விபத்து நிகழ்ந்தவுடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடிவிட்ட நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் இருவரும் சம்பவம் நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கே.வி.குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

- ராயல் ஹமீது.

Comments