இ.வி.எம் மெஷின் அறை.. வேகமாக அருகில் வந்த லாரி.. திரண்ட கட்சியினர்! பரபரப்பான லயோலா கல்லூரி!!
சென்னை: வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள் லாரி ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து இடத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் கழிவறை வசதி கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று கொண்டு வரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள்ளும் கழிவறை வசதி கொண்ட ஒரு லாரி கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
லயோலா கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டிடங்களில் கழிவறை வசதிகள் உள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க கழிவறை வசதி கொண்ட புதிதாக கண்டெய்னர் லாரி கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியும், பலத்த சந்தேகமும் எழுந்துள்ளது. பரபரப்பு நிலவியதால் லயோலா கல்லூரி வளாக பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.
Comments