எடின்பர்க் கோமகன் பிலிப் மரணம்!! - உலகத் தலைவர்கள் அஞ்சலி!!
இங்கிலாந்தின் நீண்ட நாள் இளவரசராக இருந்தவர் ஃபிலிப். அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் ஆவார். இளவரசர் பிலிப் தனது 99 வயதில் நேற்று மரணமடைந்தார்.
முன்னாள் கப்பற்படை வீரரான பிலிப், ராணி எலிசபெத்தைத் திருமணம் செய்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் ராணியாக முடிசூட்டிக் கொண்டார். இளவரசர் பிலிப் பெரும்பாலும் மக்கள் நலப் பணிகளிலும், தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ராணி எலிசபெத்துக்கு உற்ற துணையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தனது 99 வயதான இளவரசர் பிலிப்ஸின் மரணமடைந்ததாக இங்கிலாந்து அரசு குடும்பம் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்த பிரிட்டனும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
இளவரசர் பிலிப் லண்டன் மக்கள் மீதும் காமன்வெல்த் நாடுகளில் உள்ள மக்கள் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் மிகுந்த அன்புடனும் கனிவுடனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
நீண்ட நாட்கள் அரசுப் பணியில் இருந்தவர் வின்ஸ்டர் கேசில் அரசு மாளிகையில் அவருடைய உயிர் பிரிந்ததாக அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், `வின்ஸ்டர் கேசில் அரண்மனையில் இளவரசரின் உயிர் அமைதியாக பிரிந்தது. தனது ஆரூயிர் கணவர் இளவரசர் பிலிப், டியூக் ஆப் எடின்பர்க் இறந்ததை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறார்,’ என்று கூறப்பட்டுள்ளது. இளவரசர் சார்லசின் தந்தையான பிலிப், வயது மூப்பினால் 2017ம் ஆண்டு முதல் அரசு பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்த பெருமைக்குரியவர் பிலிப்.
பிரதமர் மோடி இரங்கல்:
பிரதமர் மோடி தனது இரங்கல் டிவிட்டரில், `எடின்பரக் கோமகனும், இளவரசருமான பிலிப்பின் மறைவுக்கு இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். அரசு பணிகள் மட்டுமின்றி ராணுவத்திலும் சிறப்பாக பணியாற்றிய இளவரசர் பிலிப், பல்வேறு சேவைகள் செய்த புகழுக்குரியவர். அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறாட்டும்,’ என்று கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.இராஜசேகரன், தஞ்சாவூர்.
Comments