தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட நந்தினி மனநலம் பாதித்தவர்!!

     -MMH
     தஞ்சாவூர் நகரில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து முகக் கவசம் அணியாமல் செல்வோரை எச்சரித்து அபராதம் விதிக்கின்றனர். 

நேற்றுமுன்தினமும்  அதுபோன்ற நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் மாஸ்க் அணியாமல் வந்தார். அப்போது காவல்துறையினர் அவரிடம் 200 அபராதம் விதித்ததற்கு  இத்துனூண்டு மாஸ்கிற்கு 200 ரூபாய் அபராதமா, என்ன நியாயம் இது என்று கேட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர் நீ போய் கலெக்டரிடம் கேளும்மா என்று சொல்லியுள்ளார்கள். அதற்கு அவர் கலெக்டர் இப்போ இங்கே வர சொல்லு என்று தகாத வார்த்தைகளைப் பேசி காவல்துறையினரையும் ஒருமையில் திட்டியுள்ளார். இது சம்பந்தப்பட்ட வீடியோ  சமூக  வலைத்தளங்களில் பரவிய உடன் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுரையின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். அந்தப் பெண் மனோஜிபட்டியைச் சேர்ந்த நந்தினி என்பது தெரியவந்தது . அந்தப் பெண்ணை கைது செய்த நிலையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.

பின்னர் அவரின் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்து காவல்துறையினரிடம் பேசினர். அப்போது, ``நந்தினி மனநலம் பாதிக்கப்பட்டவர், அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொண்டு வருகிறார், அதனால்தான் உங்களிடம் அப்படி நடந்து கொண்டுள்ளார், அவரை விடுதலை செய்யுங்கள், அவர் மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யுங்கள்" எனக் கோரினர். அப்போதும் நந்தினி காவல்துறையினரை  தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

காவல்துறையின்  தரப்பிலோ, ``இந்த விவகாரம் கலெக்டர், எஸ்.பியின் கவனத்திற்குச் சென்றுவிட்டது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை, பெரிய மனசு செய்து விட்டால்தான் உண்டு" என்று கூறியுள்ளனர். இதையடுத்து நந்தினியின் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கலெக்டர் கோவிந்தராவிடம் மனு கொடுத்துள்ளார். அவரும், பார்க்கலாம் எனக் கூறி அனுப்பியுள்ளார். இந்நிலையில், நேற்று எழுதி வாங்கிக்கொண்டு நந்தினியை போலீஸ் பெயிலில் விடுவித்துள்ளது. இந்த சம்பவத்தால் நந்தினியின் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments