கோவையில் உணவக ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்! காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அதிரடி மாற்றம்!
கோவை காந்திரபுரம் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக உணவங்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு 10 மணிக்கு மேலாக உணவம் திறந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, கடைக்குள் நுழைந்து ஊழியர்கள் மற்றும் அங்கு உணவு அருந்தியவர்களை தாக்கினார். இந்த சம்பவத்தில், உணவக ஊழியர்கள் மற்றும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தாக்குதல் சம்பவம் குறித்து உணவக உரிமையாளர் மோகன்ராஜ், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதத்திடம் இன்று புகார் அளித்தார். அதன் பேரில், உதவி ஆய்வாளர் முத்துவை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி, ஆணையர் உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்கவும், அவர் உத்தரவிட்டார்.
-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments