ரூபாய் பத்து இலட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனையா? வைரலாகும் ஆடியோ! சேலத்தில் பரபரப்பு!!

     -MMH

     சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி பகுதியை சார்ந்த பெண், சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், தனது 10 வயதுடைய பேத்தி, சேலம் பகுதியை சார்ந்த தொழில் அதிபரின் வீட்டில் பணியாற்றி வருகிறார்.

இந்த சிறுமியை தொழிலதிபர் சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வருகிறார். மேலும், எனது பேத்தியை காண மறுப்பு தெரிவித்து வருகிறார். அவரை விசாரணை செய்து எனது பேத்தியை காண வழிவகை செய்ய வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் சேலம் குழந்தைகள் நல அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், சிறுமியின் தாயார் உறவுக்கார பெண்ணிடம் பேசும் ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்த ஆடியோவில் தாய் பேசுகையில், " எனது குழந்தையும் நானும் நன்றாக இருக்க வேண்டும் என்று தொழிலதிபர் ரூ.10 இலட்சம் கொடுத்தார். இதனை நான் வங்கியில் வைத்துள்ளேன். இதனை வைத்து வீடு கட்டி அங்கு சென்றுவிடுவேன். எனது குழந்தையை நான் கூட பார்க்க இயலாது " என்று தெரிவிக்கிறார்.

அந்த உறவுக்கார பெண் பேசுகையில், " உனக்கு மனசாட்சி என்பது கிடையாதா?. இவ்வுளவு கொடூர பெண்ணா நீ?. உன்னிடம் பேசுவது நேர வீணடிப்பு மட்டுமே " என்று கூறி அழைப்பை துண்டிக்கிறார். இதனால், சிறுமி ரூ.10 இலட்சத்திற்கு விற்பனை செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆடியோ தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-Ln.இந்திராதேவி முருகேசன்,  சோலை. ஜெய்க்குமார்.

Comments