கொரோனா அறிகுறியா!! பதற்றப்படாமல் ஸ்க்ரீனிங் சென்டருக்கு செல்லுங்கள்!!

       -MMH 

         கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் பதற்றப்பட்டு மருத்துவமனைக்குச் செல்லாமல் அரசு அமைத்துள்ள ஸ்க்ரீனிங் சென்டருக்கு வாருங்கள். அங்கு பரிசோதனை செய்து தேவையெனில் அவர்களே மருத்துவமனைக்கு அனுப்புவார்கள் என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தண்டையார்பேட்டையில் பேட்டி அளித்த சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: "சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 200 வார்டுகளில் 200 ஆட்டோ போட்டுள்ளோம். மக்களை வரவழைத்து அருகிலுள்ள சோதனை மையங்களுக்கு அழைத்து வருகிறோம். சோதனையில் தொற்று உள்ளவர்களை, சுமார் 100 வாகனங்களைப் பயன்படுத்தி சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஸ்க்ரீனிங் சென்டர்களுக்கு அழைத்து வருகிறோம். அங்கு அவர்களுக்கு முழுமையான எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை செய்து முழுமையாக அவர்களைத் தரம் பிரித்து விடுகிறார்கள். அங்கு உங்களுக்குப் பெரிய அளவில் தொற்று பாதிப்பு இல்லை என்றால் முழுமையான நோயுற்றவர்களுடன் நீங்கள் மருத்துவமனைகளில் இருக்க வேண்டிய தேவை இல்லை.

அதே நேரம் பல்ஸ் ஆக்சிமீட்டரில் ஆக்சிஜன் அளவு 90க்குக் கீழே இருந்தது என்றால் மற்ற சோதனைகள் இல்லாமல் இங்குள்ள வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இந்த ஸ்க்ரீனிங் சென்டர்களை முழுமையாகப் புரிந்துகொண்டு மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

என்னுடைய இரண்டாவது வேண்டுகோள்- கடந்த இரண்டு நாட்களில் கரோனா தொற்று ஏறுமுகத்தின் வேகம் குறைந்துள்ளது. அது நல்ல செய்தி. ஆனால், அதையே நினைத்து அலட்சியமாக இல்லாமல் இன்னும் சற்று கடினமாக நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால் இதை இறங்கு முகத்துக்குக் கொண்டுவரலாம்.

அதேபோன்று ஆங்காங்கே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கடைப்பிடிக்கும்போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். நாம் படுக்கை வசதிகள் உள்ள மருத்துவமனைகள் குறித்து தகவல் கொடுத்துள்ளோம். கூடுதலாக 12,000 ஆக்சிஜன் படுக்கைகளைக் கொண்டுவர உள்ளோம். அதற்கு முதற்கட்டமாக இந்த வாரக் கடைசிக்குள் 2,000 படுக்கைகள் தயாராகிவிடும். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் கொண்டுவர உள்ளோம்.

ஒட்டுமொத்தமாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் 12,031 படுக்கைகள் உள்ளன. கோவிட் மருத்துவமனைகள் 5, கோவிட் ஹெல்த் சென்டர் 11, கோவிட் கேர் சென்டர் 14. இதில் 7,502 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 3,570 படுக்கைகள் காலியாக உள்ளன. இருப்பினும் பொதுமக்கள் ஓமந்தூரார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இரவில் நேரடியாக வருவதன் மூலம் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க பகல் நேரத்தில் ஸ்க்ரீனிங் சென்டர்களுக்கு வாருங்கள். பதற்றமடையாதீர்கள். அங்கு அவர்களே உங்களைப் பரிசோதித்து நோய் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். தேவைப்படாதவர்கள் நீங்களே கூடுதலாக நோயைத் தேடிக்கொள்ளாமல் மருத்துவமனைக்குப் போகாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்”. இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ருக்மாங்கதன்,சென்னை.

Comments