ஃப்ரீ ஃபயர் விளையாட அழைத்துச் சென்று, சிறுவனை நீரில் அமுக்கிக் கொன்ற கொடூரம்!

 

-MMH

      பெரம்பலூர் அருகே ஃப்ரீ ஃபயர் விளையாட சென்ற சிறுவன் உயிரிழந்த வழக்கில் தீடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு 10 வயதில் அன்புக்குமார் என்ற மகன் இருந்தான். அன்புக்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்த அன்புக்குமார், மற்ற நேரங்களில் தனது செல்போனில் ஃப்ரீ ஃபயர் விளையாடி வந்துள்ளான்.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி நண்பர்களுடன் ஃப்ரீ ஃபயர் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளான். ஆனால், அன்று இருட்டிய பின்னரும் அன்புக்குமார் வீட்டுக்கு வாராததால், அவனது செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வி.களத்தூர் காவல் நிலையத்தில் அன்புக்குமாரின் குடும்பம் புகார் கொடுத்தது. போலீசாரும் அதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்தச் சூழலில் மறுநாள் காலையில் அப்பகுதியில் உள்ள கலாற்றின் ஓரம் அன்புக்குமாரின் சடலம் கிடப்பதாக குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது.

அதனையடுத்து உறவினர்களும், பெற்றோரும் அங்கு சென்று பார்த்து சிறுவனின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அன்புக்குமார் மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் சந்தகமடைந்த போலீசார் அன்புக்குமாரை யாரேனும் நீரில் மூழ்கடித்தோ, ஆற்றில் தள்ளிவிட்டோ கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நடத்தினர். அப்போது, சிறுவனின் செல்போன் எண்ணிற்கு வந்த கடைசி அழைப்பை குறித்து விசாரித்தனர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த 19 வயதான தனுஷ் என்ற வாலிபர் சிக்கினார். அவரைக் கைது செய்து விசாரித்தபோது, கொலைக்கான பின்னணி வெளியாகியது. அதாவது, அன்புக்குமார் ஏற்கனவே பயன்படுத்தி வந்த செல்போன் பழுதானதால், புதிய ஆண்டிராய்டு போனை அவரது பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த போன் மீது தனுஷுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. எப்படியாவது அன்புக்குமாரிடம் இருந்து அந்த போனை திருடிவிட வேண்டும் என்று நினைத்திருந்த தனுஷ், சம்பவத்தன்று அன்புக்குமாரை தொடர்பு கொண்டார். அப்போது, ஃப்ரீ ஃபயர் செயலியை பதிவிறக்கம் செய்து தருகிறேன் என்று கூறி கல்லாற்றுக்கு வரவைத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த அன்புக்குமாரை தேங்கியிருந்த தண்ணீரில் தள்ளி, நீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் செல்போனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். இந்நிலையில், தனுஷிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

-பாரூக்.

Comments