வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதி! மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி அறிவிப்பு!

-MMH

          சிங்கம்புணரி தாலுகா, வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தை சுற்றி 1 கி.மீ. தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார். சிங்கம்புணரி அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பறவைகள் சரணாலயத்தில் வனத்துறையின் மூலம் திட்டப்பணிகளை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

அப்போது அவர், 'பிரசித்தி பெற்ற வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் வந்து செல்கின்றன. இந்தப் பறவைகள் அதிகளவில் வருகை தருவதற்கான இயற்கை சூழல் அமைந்துள்ள அந்தப்பகுதியில், அரசுத்துறைகள் மற்றும் பிற துறைகளின் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது பறவைகளின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு செயல்படும் வகையில் அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி குழு ஒன்று அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


அந்தக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், உறுப்பினர் செயலராக மாவட்ட வன அலுவலரும், உறுப்பினர்களாக தொண்டு நிறுவனங்கள் சார்பாக ஒருவரும், விலங்கியல் பாடத்திட்ட முதுநிலைப் பேராசிரியர் ஒருவரும், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஒருவரும், மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர்களும் இருப்பார்கள்.

மேலும் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தை மையமாக வைத்து அதனைச்சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் பறவைகளின் பாதுகாப்பு நலன் கருதி எவ்வித புதிய திட்டப்பணிகளோ மற்றும் பறவைகளுக்கான அச்சுறுத்தல் ஏற்படும் வகையான பணிகளோ மேற்கொள்ளாத வண்ணம் பாதுகாக்கப்பட்டப்பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏதேனும் புதிய பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டால் மேற்கண்ட குழு ஒப்புதல் பெற்ற பின்னரே திட்டப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

இப்பகுதியில் பொதுமக்களும் பறவைகளின் நலன் கருதி தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கூட பட்டாசுகள் பயன்படுத்தாமல் விழாக்கொண்டாடி பறவைகளை பாதுகாத்து வருகிறார்கள். அதற்கேற்ப எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பறவைகளின் சரணாலயத்தை பாதுகாக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளவேண்டும்.

இந்த நிலையில் தற்போது திருப்பத்தூர் முதல் மேலூர் வரை மாநில நெடுஞ்சாலையில் விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இச்சாலை பறவைகள் சரணாலயம் வழியாகச் செல்ல உள்ளதால், மேற்கண்ட குழு ஒப்புதல் பெறுவதற்காக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இக்குழு மூலம் இப்பகுதி பொதுமக்கள் நலன் கருதியும், பறவைகள் சரணாலாயத்திற்கு பாதிப்பு இல்லாத வகையிலும் சாலை விரிவுபடுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள குழு ஆராய்ந்து அதற்கேற்ப ஆலோசனையின்படி பணிகளை மேற்கொள்ள உள்ளன.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ரமேஸ்வரன், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மணிவண்ணன், திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி விலங்கியல் பேராசிரியர் கோபிநாத், சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரும் மதுரை தியாகராஜ கலைக்கல்லூரி பேராசிரியருமான கண்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-அப்துல் சலாம், திருப்பத்தூர்.

Comments