கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 'நோடல் ஆபீசர்'கள் நியமனம்! கோவை கலெக்டர் போர்க்கால நடவடிக்கை!!

     -MMH

     கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், மாநகராட்சி பகுதியில், 'கொரோனா' தொற்று பரவல் தடுக்க, மண்டல அளவில், டி.ஆர்.ஓ., அந்தஸ்தில், 'நோடல் ஆபீசர்' நியமித்து, கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: கொரோனா பரவல் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி, வருவாய்த்துறை, போலீஸ் மற்றும் சுகாதாரத்துறையினரை ஒருங்கிணைத்து, பணியாற்ற வேண்டும்.தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாதிரி சேகரிப்பை அதிகரிக்க வேண்டும். பரிசோதனை முடிவை விரைவில் பெறுவதற்கான நடவடிக்கை வேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில், வீடு வீடாகச் சென்று சர்வே எடுக்க வேண்டும்.

மண்டல அளவில் பரிசோதனை மையங்கள் உருவாக்க வேண்டும். இம்மையங்கள், வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டோருக்கு உரிய அறிவுரை வழங்கி, மருத்துவமனைக்கோ / கொரோனா சிகிச்சை மையத்துக்கோ அனுப்ப வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.தொற்று பரவிய இடங்கள் மற்றும் மார்க்கெட்டுகள், வணிக வளாக பகுதிகளில், தினமும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

மண்டல அளவில் கட்டுப்பாட்டு மையங்கள் துவங்கி, 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.சிகிச்சை மையங்கள் அமைக்க திருமண மண்டபங்கள், கல்லுாரி, பள்ளிகளை கண்டறிய வேண்டும். தனிமைப்படுத்திய ஏரியாக்களை முறையாக கண்காணிக்க வேண்டும். அப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். அப்பகுதிக்குள் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.மாநகராட்சி/வருவாய்த்துறை/ காவல் துறை/ சுகாதாரத்துறையினரை ஒருங்கிணைத்து, கொரோனா பரவல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'நோடல் ஆபீசர்'கள், மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் தடுக்க, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

'நோடல் ஆபீசர்'கள்:

தெற்கு மண்டலம் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி.

வடக்கு மண்டலம் - மேனகா, கோவில் நிலங்கள் சிறப்பு அதிகாரி.

கோவை கிழக்கு மண்டலம் - மதுராந்தகி, மாநகராட்சி துணை கமிஷனர் (மற்றும் வழக்கமான பணி)

மேற்கு மண்டலம் - சாதனைக்குரல், தமிழ்நாடு மாநில முதுநிலை மண்டல மேலாளர்.

மத்திய மண்டலம் - கலைவாணி, துணை கமிஷனர் (கலால்), கோவை.

-சோலை. ஜெய்க்குமார்/ Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments