சிங்கம்புணரியில் தென்னை மஞ்சி ஏற்றி வந்த வாகனம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசம்!
சிங்கம்புணரியைச் சேர்ந்த பாலு என்பவர், தனக்குச் சொந்தமான சரக்கு வாகனத்தில் கயிறு உற்பத்தி செய்வதற்கான தென்னை மஞ்சி ஏற்றிக்கொண்டு, விராலிமலையிலிருந்து சிங்கம்புணரிக்கு வந்து கொண்டிருந்தார். அவரது சரக்கு வாகனம் எம்.கோவில்பட்டி அருகே வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் மஞ்சி உரசியதால் சரக்கு வாகனம் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தனது வாகனம் தீப்பிடித்து எரிந்ததைக் கண்ட வாகனத்தின் ஓட்டுநரும் உரிமையாளரருமான பாலு, வாகனத்தை எம்.கோவில்பட்டி கிராமத்தின் குடியிருப்புப் பகுதியில் நிறுத்திவிடாமல், 200 மீட்டர் தூரத்தில் உள்ள மஞ்சுவிரட்டுத் திடலில் கொண்டு வந்து பாதுகாப்பாக நிறுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. காற்றின் வேகத்தால் சரக்கு வாகனத்திலிருந்த தென்னை மஞ்சியும், வாகனமும் முற்றிலும் எரிந்து நாசமானது.
சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வாகனம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு பெட்டியின் பாதுகாப்பிற்காக சென்றிருந்த நிலையில், திருப்பத்தூரிலிருந்து வந்த தீயணைப்பு வாகனம், சிங்கம்புணரிக்கு வந்து சேர ஏற்பட்ட கால தாமதத்தில் சரக்கு வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது.
திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையிலான தீயணைப்புப் படையினர், மீதம் எரிந்து கொண்டிருந்த வாகனத்தின் நெருப்பை அணைத்தனர். நான்கு சக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments